செய்திகள்
கோப்புபடம்

காரியாபட்டி பேரூராட்சியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

Published On 2020-10-30 11:38 GMT   |   Update On 2020-10-30 11:38 GMT
காரியாபட்டி பேரூராட்சியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரியாபட்டி:

காரியாபட்டி பேரூராட்சி, பாண்டியன் நகர், சம்மங்கி தெருவில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்த பகுதியில் ஒரு தனியார் உயர்நிலைப்பள்ளி உள்ளது. மேலும் இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் மழை தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற தொற்றுநோய்கள் பரவும் நிலை உருவாகிறது. இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ஆர்.கே. செந்தில் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்த காரியாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் காரியாபட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் சாலை சம்பந்தமாக தகவல் தெரிவித்து விரைவில் சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News