செய்திகள்
கடத்தல்

கரூர் அருகே பாலிடெக்னிக் மாணவர் காரில் கடத்தல்

Published On 2020-10-30 09:44 GMT   |   Update On 2020-10-30 09:44 GMT
கரூர் அருகே பாலிடெக்னிக் மாணவர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் அருகே உள்ள நரிகட்டியூர் பகுதியை சேர்ந்தவர் அருள்சாமி. இவரது மனைவி அம்சவேணி. இந்த தம்பதியின் மகன் ஆதீஷ்பிரனவ் (வயது 15). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கால் கல்லூரி மூடப்பட்டதால் வீட்டில் இருந்தார். இந்தநிலையில் ஆதீஷ்பிரனவ் நேற்று காலை காந்தி கிராமத்தில் உள்ள கடைவீதிக்கு சைக்கிளில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். காந்திகிராமம் ஆயுதப்படை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, சைக்கிளில் செயின் கழன்றதையடுத்து, இறங்கி அதை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது வெள்ளைநிற ஆம்னி காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்து இறங்கி ஆதீஷ்பிரனவ்வை, வலுக்கட்டாயமாக காருக்குள் தூக்கிப்போட்டு, அவரது முகத்தில் கைக்குட்டை வைத்து அமுக்கி உள்ளனர். இதனால் அவர் மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து அந்த கும்பல் ஆதீஷ்பிரனவை காரில் கடத்தி சென்றது. வாங்கல் அருகே அந்த ஆம்னி கார் சென்றபோது கண்விழித்த ஆதீஷ்பிரனவ் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அந்த கும்பல் வாங்கல் காவிரி பாலம் அருகே அவரை இறக்கிவிட்டு, காரில் தப்பி சென்று விட்டனர். இதையடுத்து ஆதீஷ்பிரனவ், அப்பகுதியில் இருந்த ஒரு விவசாயியிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து ஆதீஷ்பிரனவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆதீஷ்பிரனவ் பெற்றோர், உறவினர்கள் வாங்கல் பகுதிக்கு சென்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் ஆதீஷ்பிரனவ்வின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News