செய்திகள்
பொதுமக்கள் எதிர்ப்பு

திருவையாறு அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2020-10-30 08:52 GMT   |   Update On 2020-10-30 08:52 GMT
திருவையாறு அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள உமையவள் ஆற்காடு - நாகத்தி கிராமங்களுக்கு இடையே, அரசு டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த கடையை வருகிற 1-ந்தேதி திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இப்பகுதியில் மதுக்கடை அமைத்தால், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும். பெண்கள், குழந்தைகள், மாணவ, மாணவிகள் நடமாட முடியாத நிலை ஏற்படும் என இப்பகுதி பொதுமக்கள் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சமுத்திரம், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மாலதி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் அபிமன்னன், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் கோவிந்தராஜூ ஆகியோர் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் பகுதியில் மதுக்கடை திறக்க அனுமதிக்கக்கூடாது என கோஷங்கள் எழுப்பினர்.

அதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவை சந்தித்து மனுவும் அளித்தனர். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுகுறித்து பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Tags:    

Similar News