செய்திகள்
பொறியாளர் (கோப்பு படம்)

பொறியாளர்கள் இல்லை, பொறியியல் பட்டதாரிகள் தான் உருவாகின்றனர் -நீதிபதிகள் அதிருப்தி

Published On 2020-10-29 10:16 GMT   |   Update On 2020-10-29 10:16 GMT
தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மதுரை:

அரசு, தனியார் கல்லூரிகள், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊழியம் வழங்கவில்லை எனக் கூறி திருச்சியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள்  கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் அதிகரிப்பு குறித்தும், கல்வித்தரம் குறித்தும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இங்கு பொறியாளர்கள் உருவாவதில்லை, பொறியியல் பட்டதாரிகள்தான் உருவாகின்றனர் என்றும் கூறினர்.

தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவ்வளவு பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தந்தது அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலா? மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுவதற்கு அனுமதி வழங்கியவர்கள்தான் காரணம். இதுபோன்ற பிரச்சினைகளை களைய தேவைக்கேற்ப கல்லூரிகளை தொடங்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும், இந்த வழக்கில் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கத்தை எதிர்மனுதாரராக சேர்த்து, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News