செய்திகள்
உயர் நீதிமன்ற மதுரை கிளை

7.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும் -உயர் நீதிமன்ற மதுரை கிளை

Published On 2020-10-29 09:50 GMT   |   Update On 2020-10-29 09:50 GMT
7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
மதுரை:

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் சில முன்னேற்றங்கள் நடைபெற்றுள்ளன. 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்துள்ளனர். ஆளுநர் இது குறித்து முடிவெடுக்க மூன்று முதல் நான்கு வார கால அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார். 

அப்போது பேசிய நீதிபதிகள், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம்  இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்பது தங்களுக்கு தெரியும் என்றும், ஆனால் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

“சட்ட மசோதா ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட பிறகு விரைவாக முடிவு எடுக்கப்பட வேண்டும். சட்டமன்றத்தில் பல ஆலோசனைகள் மற்றும் யோசனைகளுக்கு பிறகுதான் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கும். அப்படி இருக்கும்போது பல கோணங்களில் ஆலோசிக்க மேலும் கால அவகாசம் தேவையா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

மேலும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பலர் இணைந்து இந்த சட்டத்தை உருவாக்கி உள்ளார்கள். எனவே கூடுதல் கால அவகாசம் கேட்பது விசித்திரமானது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டநிலையில் விரைவாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News