செய்திகள்
அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள உப்பளத்தில் உப்பு உற்பத்தி பணிகள் நடைபெறாமல் இருப்பதை படத்தில் காணலாம்.

வடகிழக்கு பருவமழை எதிரொலி: அதிராம்பட்டினத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தம்

Published On 2020-10-28 13:43 GMT   |   Update On 2020-10-28 13:43 GMT
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதன் எதிரொலியாக அதிராம்பட்டினம் பகுதியில் உப்பு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட உப்பை வெளி மாநிலத்துக்கு ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதிராம்பட்டினம்:

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை மறவக்காடு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளங்கள் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் உப்பு வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்ததால் உப்பு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இடையிடையே மழை பெய்து வந்ததால் உப்பளங்களில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டன.

மழை அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட உப்பை பாதுகாக்கும் பணியில் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதன் எதிரொலியாக அதிராம்பட்டினம் பகுதியில் உப்பு உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து உப்பள தொழிலாளர்கள் கூறியதாவது:-

இனிமேல் மழை காலம் தான் என்பதால் உப்பு உற்பத்தியை நிறுத்தி விட்டோம். தற்போது உப்பளங்களில் இருந்து வாரப்பட்ட உப்பு மட்டும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இனிமேல் அடுத்த ஆண்டு (2021) ஜனவரி மாதத்துக்கு பிறகு தான் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்கும்.

இவ்வாறு தொழிலாளர்கள் கூறினர்.
Tags:    

Similar News