செய்திகள்
மாட்டு வண்டியில் தண்ணீர் வினியோகம் செய்யும் முதியவர்

மாட்டு வண்டியில் தண்ணீர் வினியோகம் செய்யும் முதியவர்

Published On 2020-10-28 08:18 GMT   |   Update On 2020-10-28 08:18 GMT
கடந்த 35 ஆண்டுகளாக மாட்டுவண்டி மூலம் தண்ணீர் வினியோகம் செய்து வரும் முதியவர், உடலில் வலு இருக்கும் வரையிலும் உழைத்து கொண்டே இருப்பேன் என்கிறார்.
ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வீடுகள் மற்றும் கடைகளில் குடிநீர் இணைப்பு, ஆழ்துளை கிணறு வசதி உள்ளிட்ட அதிக தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் மாற்றி யோசித்தார் இளைஞர் ஒருவர். தண்ணீருக்காக காத்து கிடக்கும் பொதுமக்களுக்கு அதனை அவர்கள் வீடுகள் அல்லது கடைகளுக்கு கொண்டு கொடுத்தால் அதன் மூலம் நாலு காசு பார்க்கலாமே என்று அவர் எண்ணினார். அதன் விளைவாக அவர் ஊருணி பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் பின்னால் பேரலை வைத்து உணவகங்கள், தேனீர் கடைகளுக்கு தண்ணீர் கொடுக்கும் தொழிலை தொடங்கினார். அவர் தான் சிவன் ஆறுமுகம்.

தற்போது அவருக்கு வயது 67 ஆகிறது. பழைய மாட்டு வண்டி, நலிவடைந்த காளையை கொண்டு தனது தொழிலை அவர் தொடங்கிய போது சுமார் 200 லிட்டர் தண்ணீரின் விலை ரூ. 6. அதன் பின்னர் டிராக்டர், லாரி போன்ற வாகனங்களில் தண்ணீர் கொண்டு செல்லும் வியாபாரிகள் பெருகினாலும், இந்த மாட்டு வண்டி தண்ணீருக்கு எப்போதும் கிராக்கி இருந்து கொண்டே இருந்தது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் கடந்த 35 ஆண்டுகளாக மாட்டுவண்டி மூலம் தண்ணீர் வினியோகம் செய்து வருகிறேன். இதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தான் எனது 2 பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கினேன். ஆரம்பத்தில் ஒரு வண்டி தண்ணீர் ரூ. 6-க்கு விற்பனை செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாக இது உயர்ந்து தற்போது ரூ. 60 என விற்பனை செய்கிறேன். கேன்களில் அடைத்து விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் லிட்டர் ஒன்றிற்கு ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்கப்படும் நிலையில் நான் விற்கும் தொகை மிகவும் சொற்பம்தான். எனினும் இது எனக்கு கட்டுபடி ஆகிறது. வயதான காலத்தில் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பாமல் உடலில் வலு இருக்கும் வரையிலும் உழைத்து கொண்டே இருப்பேன்’ என்கிறார்.
Tags:    

Similar News