செய்திகள்
கோப்பு படம்.

பஞ்சாயத்து தலைவர்-ஊழியர் படுகொலை: மதுரை பிரபல ரவுடியின் தம்பி உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு

Published On 2020-10-26 09:59 GMT   |   Update On 2020-10-26 09:59 GMT
பஞ்சாயத்து தலைவர் உள்பட 2 பேர் கொலை வழக்கில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மதுரை:

மதுரை கருப்பா யூரணியை அடுத்த குன்னத்தூர் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன் (வயது 48), குடிநீர் பம்ப் ஆபரேட்டர் முனிச்சாமி (40) ஆகியோர் கடந்த 12-ந்தேதி அங்குள்ள மலைப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா மேற்பார்வையில் ஊமச்சிக்குளம் டி.எஸ்.பி. விஜயகுமார் மற்றும் கருப்பாயூரணி இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் தம்பி செந்தில் மற்றும் பாலகுரு ஆகிய 2 பேருக்கு இரட்டைக்கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கான காரணம் தெரியவந்தது இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் தம்பி செந்திலுக்கும், பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணனுக்கும் பழக்கம் இருந்தது.

இந்த நிலையில் குன்னத்தூர் ஒன்றிய தலைவர் தேர்தலில், தி.மு.க. சார்பில் செந்தில் தனது மனைவியை நிறுத்தி இருந்தார். இதுதொடர்பாக அவர் கிருஷ்ணனிடம் ஆதரவு கேட்டார். ஆனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட வாத்தியார் பாண்டி வெற்றி பெற்றார். அவருக்கு பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன் ஆதரவு அளித்ததாக செந்திலுக்கு தெரியவந்தது. இதனால் கிருஷ்ணணனை பழிவாங்க நேரம் பார்த்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த கிரானைட் விற்பைனயாளர் பாலகுரு என்பவருடன் செந்திலுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணனின் நெருங்கிய உறவினர்.

அவர் குன்னத்தூரில் வணிகம் செய்ய அனுமதி கேட்டபோது, கிருஷ்ணன் அனுமதி தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கிருஷ்ணனுக்கும், தனது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக பால குருவுக்கு சந்தேகம் வந்தது.

இதனால் செந்தில் மற்றும் பாலகுருவுக்கு பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன் மீது ஆத்திரம் ஏற்பட்டது. அவரை தீர்த்து கட்ட திட்டமிட்டு சம்பவத்தன்று குன்னத்தூர் மலைபகுதியில் இருந்த கிருஷ்ணன் மற்றும் முனிச்சாமியை வெட்டி கொலை செய்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதான செந்தில், பாலகுரு ஆகியோர் கோர்ட் டில் ஆஜர்படுத்தப்பட்டு விருதுநகர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இரட்டை கொலை வழக்கில் முக்கிய காரணம் தேர்தல் தகறாரா? அல்லது கள்ளத்தொடர்பா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து விரைவில் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News