செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை 2½ லட்சத்தை எட்டுகிறது

Published On 2020-10-25 06:59 GMT   |   Update On 2020-10-25 06:59 GMT
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை 2½ லட்சத்தை எட்டி உள்ளது. தினமும் பரிசோதனையும் 2,500-க்கும் குறைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர்:

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களுள் தஞ்சையும் ஒன்றாக விளங்கியது. அதன்படி தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாக தொற்று 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்பட்டது.

அதன் பின்னர் தொற்று குறையத்தொடங்கியது. தற்போது கடந்த சில நாட்களாக 100-க்கும் குறைவாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் அறிகுறி காணப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி, ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை, கல்லுக்குளம், கரந்தை, மானம்புச்சாவடி, சீனிவாசபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர மாநகராட்சி சார்பில் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனமும் செயல்பட்டு வருகின்றன.

இதே போல் கும்பகோணம் அரசு மருத்துவமனை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டத்தில் தினமும் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இது குறைந்து 2 ஆயிரம் முதல் 2,300 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 20-ந்தேதி தஞ்சை மாவட்டத்தில் ஆயிரத்து 961 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 21-ந்தேதி 2 ஆயிரத்து 10 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் 22-ந்தேதி 2,269 பேருக்கும், நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 175 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 47 ஆயிரத்து 405 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 14 ஆயிரத்து 865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 14 ஆயிரத்து 141 பேர் தொற்று குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 433 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மாவட்டத்தில் 215 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2½ லட்சத்தை எட்டி உள்ளது.
Tags:    

Similar News