செய்திகள்
கொள்ளை

மேட்டூர் பகுதியில் கோவில், வீடுகளில் திருட்டு

Published On 2020-10-24 14:18 GMT   |   Update On 2020-10-24 14:18 GMT
மேட்டூர் பகுதியில் ஒரே நாளில் கோவில், வீடுகளில் திருட்டு, நகை பறிப்பு சம்பவங்கள் நடந்ததால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
மேட்டூர்:

மேட்டூர் பழைய மார்க்கெட் பகுதியில் சக்தி காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு கும்பல் புகுந்தது. பின்னர் அந்த கும்பல் அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த தங்கத்தாலி மற்றும் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும், திருடிச்சென்றது.

இதனிடையே நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள், கோவிலில் திருட்டு சம்பவம் நடைபெற்றிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து மேட்டூர் போலீசார் விரைந்து வந்து இந்த திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூர் அருகே உள்ள ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் வீட்டை பூட்டி விட்டு தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இவருடைய வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது.

இதே பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். நள்ளிரவில் இவருடைய வீட்டுக்குள் புகுந்த ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றது. இந்த 2 சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

மேட்டூர் பகுதியில் ஒரே நாளில் கோவில், வீடுகளில் திருட்டு, நகை பறிப்பு சம்பவங்கள் நடந்ததால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை விரைந்து பிடித்து கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News