செய்திகள்
கோப்புபடம்

தீபாவளியையொட்டி அரசு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் - கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

Published On 2020-10-24 12:07 GMT   |   Update On 2020-10-24 12:07 GMT
தீபாவளியையொட்டி, அரசு விதிமுறைகளை கடை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
குளித்தலை:

தீபாவளியையொட்டி, குளித்தலை பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்கள் கடைகளில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் குளித்தலை அண்ணா சமுதாய மன்றத்தில் நடைபெற்றது. போலீஸ் துணை சூப்பிரண்டு சசீதர், நகராட்சி ஆணையர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு குளித்தலை உதவி கலெக்டர் ஷேக்அப்துல் ரகுமான் தலைமை தாங்கி பேசியதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடுவதால் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையிலும் பலர் முககவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றுவதில்லை.

ஆகவே, தங்களது கடைக்கு முககவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்க கூடாது. முககவசம் அணிந்து வரச் செய்ய வேண்டும். ஒவ்வொரு கடையிலும் கிருமி நாசினி வைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் கைகளை கழுவ அறிவுறுத்த வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

பண்டிகை நாட்களில் தங்கள் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும். டிஜிட்டல் முறையில் (கூகுள் பே, பே.டி.எம்.) பணபரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். ஓட்டல்கள், பழக்கடைகள், டீ மற்றும் பேக்கரி உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில், கைஉறை அணிந்து உணவு பொருட்களை வழங்க வேண்டும். அரசு விதிமுறைகளை கடை உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும். அபராதம் விதிக்கும் அளவிற்கு நடந்து கொள்ளக் கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், தாசில்தார் முரளிதரன், குளித்தலை வியாபாரிகள் சங்கத் தலைவர் பல்லவி ராஜா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் கடை உரிமையாளர்கள், வருவாய்த்துறை மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News