செய்திகள்
திமுக தலைவர் முக ஸ்டாலின்

அதிமுக ஆட்சி மக்களால் நிராகரிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை- மு.க.ஸ்டாலின்

Published On 2020-10-24 01:56 GMT   |   Update On 2020-10-24 01:56 GMT
வரலாற்று பிழைகளுக்கு துணை போகும் அதிமுக ஆட்சி தமிழக மக்களால் நிராகரிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எஸ்.பி.ஐ. (பாரத ஸ்டேட் வங்கி) ஜூனியர் அசோசியேட்ஸ் பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தவரை விடக் குறைந்த “கட் ஆப்” மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேர்வு எழுதிய பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர் “கட் ஆப்” மதிப்பெண்ணாக 62 பெற்றுள்ள நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் மட்டும் 57.75 “கட் ஆப்” மதிப்பெண்கள் பெற்று முதன்மை தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளார்கள்.

பாரத ஸ்டேட் வங்கியில் காசாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் வேலைவாய்ப்பு, முன்னேறிய வகுப்பினருக்கான இந்த 10 சதவீத பொருளாதார இடஒதுக்கீட்டால் பறிக்கப்பட்டுள்ளது. இப்போது, மத்திய அரசின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான ஆயில் இந்தியா நிறுவனத்தில் “சீனியர் செக்யூரிட்டி ஆபீஸர்” மற்றும் “சீனியர் மெடிக்கல் ஆபீஸர்” உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கப் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கட்டணம் ஏதுமில்லை என்றும், பிற்படுத்தப்பட்டவர்கள் மட்டும் ரூ.500 கட்டணம் செலுத்தவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது இன்னொரு அநீதி.

கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு பல ஆண்டுகளாக கிடைத்துவரும் சமூகநீதியை பறிக்கவே, “முன்னேறிய வகுப்பினருக்கு” 10 சதவீத இடஒதுக் கீட்டை மத்திய பா.ஜ.க. அரசு, அரசமைப்பு சட்டத்திற்கு முரணாக, திட்டமிட்டுக்கொண்டு வந்தது. இதற்கு முன்பு நடைபெற்ற எஸ்.பி.ஐ. தேர்வு, வங்கி பணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளிலும் இந்த சமூக அநீதி தொடர்ந்து இழைக்கப்பட்டு வருகிறது.

ஒருபுறம் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான வேலைவாய்ப்பை பறித்து இன்னொரு பக்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறியபிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கினை சுப்ரீம் கோர்ட்டில் விரைந்து நடத்தாமல் தாமதப்படுத்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, முழுக்க முழுக்க இட ஒதுக்கீட்டு கொள்கைகளுக்கு எதிரானது என்பது தினமும் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 10 சதவீத இடஒதுக்கீடு நிச்சயம் ரத்து செய்யப்படவேண்டும் என்பதே இந்தியாவில் உள்ள 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெரும்பான்மை மக்களின் உறுதியும் இறுதியுமான கருத்தாகும்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் மத்திய அரசு பணிகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலையில் சேருவதற்கு எல்லா வகையிலும் தடைகளை ஏற்படுத்தி இட ஒதுக்கீட்டு கொள்கையின் அடிப்படை அம்சங்களை தகர்த்தெறியும் கேடுகெட்ட செயலில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இட ஒதுக்கீட்டு கொள்கையை பாழ்படுத்தும் அத்தனை முயற்சிகளுக்கும் அமைதியாக துணை நின்று, இதை தட்டிக்கேட்க தயங்கி நிற்கும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக இளைஞர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து வருகிறார்.

தமிழக கவர்னர் தரப்பிலிருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்துங்கள் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டதாக வந்த செய்திகளை இதுவரை முதல்-அமைச்சர் மறுக்காமல் இருப்பதன் பின்னணி என்ன? சமூகநீதிக்கு போகிறபோக்கில் இன்னொரு துரோகத்தை செய்வதற்கு மத்திய பா.ஜ.க. அரசுடன் எடப்பாடி பழனிசாமி திரைமறைவில் கைகுலுக்கி கொண்டிருக்கிறாரா?

இந்த அநீதிகளை அக்கிரமங்களை பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின இளைஞர்கள் நீண்ட காலம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்றும், சமூகநீதி வரலாற்றில் இதுபோன்ற வரலாற்று பிழைகளுக்கு துணை போகும் அ.தி.மு.க.வும், அதன் ஆட்சியும் அடியோடு தமிழக மக்களால் நிராகரிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News