செய்திகள்
மீட்பு

4 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்த 7 பேர் மீட்பு

Published On 2020-10-23 06:12 GMT   |   Update On 2020-10-23 06:12 GMT
திருத்தணி அருகே 4 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்த 7 பேர் மீட்கப்பட்டனர்.
பள்ளிப்பட்டு:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா நெடும்பரம் கிராமத்தில் கருவேல மரங்களை வெட்டுவதற்கு கொத்தடிமைகளை பயன்படுத்தி வருவதாக திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யாவுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நேற்று ஆர்.டி.ஓ. சத்யா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 7 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்வது தெரியவந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கள் திருத்தணி அடுத்த கனகம்மா சத்திரம் அருகே இலுப்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்களை ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா பாராஞ்சி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 ஆயிரம் கொடுத்து கருவேல மரங்களை வெட்ட அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது முதல் இவர்கள் செய்த வேலைக்கு சரியான கூலியும் கொடுக்கவில்லை. தினசரி சாப்பாட்டுக்கு அரிசி, பருப்பு வழங்கவில்லை என்பது தெரிய வந்தது. ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வேலை வாங்கி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கோபி (வயது 33) , சுமதி (31), சங்கர் (28) , தேசம்மாள் (23), நந்தினி (12), யுவராஜ் (7), ஆனந்த் (5) என்பது தெரியவந்தது. அவர்களை ஆர்.டி.ஓ. சத்யா மீட்டு திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.

இரு குடும்பங்களை சேர்ந்த அவர்களுக்கு அரசு நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு அவர்கள் அவர்களது சொந்த ஊரான இலுப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை கொத்தடிமைகளாக நடத்திய ரமேஷ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News