செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

எவ்வளவு கோடி செலவானாலும் மக்கள் உயிரை காக்கும் எண்ணத்தோடு தான் அதிமுக அரசு செயல்படும் - ஜெயக்குமார்

Published On 2020-10-22 14:52 GMT   |   Update On 2020-10-22 18:25 GMT
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் போது, எவ்வளவு கோடி செலவானாலும் மக்கள் உயிரை காக்கும் எண்ணத்தோடு தான் அதிமுக அரசு செயல்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பீகார் மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய தடுப்பூசியை பாஜக அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகிறது என்று பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர், “ஆட்சியாளர்கள் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். வேறுபாடு என்பது இருக்கக் கூடாது. தேர்தல் அறிக்கையில் அவ்வாறு சொல்லியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று தான்.

கொரோனாவிற்கான நிரந்தர தீர்வு என்பது தடுப்பூசி கண்டுபிடித்தால் தான் முடியும். அப்படிப்பட்ட தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் போது, எவ்வளவு கோடி செலவானாலும், மக்களின் உயிர் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அதிமுக அரசு செயல்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News