செய்திகள்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறக்க உள்ள ஜல்லிக்கட்டு காளை வெண்கல சிலை

எடப்பாடி பழனிசாமி நாளை புதுக்கோட்டை சுற்றுப்பயணம் - ஜல்லிக்கட்டு காளை வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்

Published On 2020-10-20 19:15 GMT   |   Update On 2020-10-20 19:15 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வியாழக்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (வியாழக்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரூ.700 கோடியில் அமைக்கப்பட்டுள்ள உணவுப்பொருள் தொழிற்சாலை விரிவாக்கத்தை அவர் தொடங்கிவைப்பதுடன், ஜல்லிக்கட்டு காளை வெண்கல சிலையை திறந்துவைக்கிறார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்ல இருந்த நிலையில், அவரது தாயார் மறைந்த செய்தி கேட்டு, சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு சேலம் சென்றார். இறுதிச்சடங்கு மற்றும் காரிய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.

தற்போது, மீண்டும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கிறார். அந்த வகையில், நாளை (வியாழக்கிழமை) காலை 8.45 மணிக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்படுகிறார். திருச்சி விமான நிலையம் சென்றவுடன், அங்கிருந்து காரில் விராலிமலைக்கு செல்கிறார்.

சென்னையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி, ஐ.டி.சி. நிறுவனம் ரூ.700 கோடி செலவில் அங்கு உணவுப்பொருள் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்துள்ளது. இந்த புதிய தொழிற்சாலையை எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார்.

மேலும், விராலிமலையில், சீறிச்செல்லும் ஜல்லிக்கட்டு காளையை ஒரு வீரர் அடக்குவது போன்ற வெண்கல சிலையை அவர் திறந்துவைக்கிறார். விராலிமலையில்தான் ஜல்லிக்கட்டில் ஒரு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்பு, தமிழக மக்களின் 100 ஆண்டு கனவுத்திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் மிக முக்கிய அங்கமான 1088 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய குளமான கவிநாடு கண்மாயை அவர் பார்வையிடுகிறார்.

பிறகு அங்கிருந்து புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு இதயநோய் சிகிச்சைக்கான ‘கேத்லாப்’ வசதியை திறந்துவைக்கிறார். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிக்கப்பட்ட திட்டங்களையும் அவர் திறந்துவைக்கிறார்.

அதன்பின்னர், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன நிர்வாகிகள், விவசாயிகள், மகளிர் சுயஉதவி குழுவினரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

இந்த மாவட்டத்தில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் எந்த வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற ஆய்வையும் அவர் நடத்துகிறார்.
Tags:    

Similar News