செய்திகள்
கோப்புப்படம்

வெங்காயம் விலை ‘கிடு கிடு’ உயர்வு - கிலோ ரூ.90-க்கு விற்பனை

Published On 2020-10-20 19:01 GMT   |   Update On 2020-10-20 19:01 GMT
வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைவால் வெங்காயத்தின் விலை ‘கிடு கிடு’வென உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னை:

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தேவையான காய்கறிகளை விற்பனை செய்யும் மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் திகழ்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் லாரி, லாரியாக காய்கறிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சமையலின் முக்கிய ஆதாரமாக திகழும் பெரிய வெங்காயத்தின்(பல்லாரி) விலை ‘கிடு கிடு’வென உயர்ந்து உள்ளது. இந்த விலையேற்றமானது மக்களை விழி பிதுங்கச் செய்துள்ளது.

வெங்காய விலை உயர்வு குறித்து கோயம்பேடு உருளை கிழங்கு மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

தமிழகத்தில் பெரிய வெங்காயம் உற்பத்தி மிகவும் குறைவு. எனவே, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங் கானா மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. இந்த ஆண்டு மழை காரணமாக வெங்காயம் அழுகி போனதால் பெரிய வெங்காய வரத்து குறைந்து உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒரு நாளைக்கு 60, 70 லாரிகளில் வெங்காயம் வருவது வழக்கம். இதன் மூலம் ஒரு நாளைக்கு 1,400 டன் முதல் 1,500 டன் வரை வெங்காயம் கொண்டு வருவது வழக்கம். ஆனால், தற்போது 30 லாரிகளில் 600 முதல் 750 டன் வெங்காயம் மட்டுமே வருகிறது.

இதனால், கடந்த வாரம் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் நேற்று ‘கிடு கிடு’வென உயர்ந்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளி சந்தையில் இது ரூ.80-90 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று சாம்பார் வெங்காயம் கோயம்பேடு மார்க்கெட்டில் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளி சந்தையில் சில்லரைக்கு ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் மாதம் புது வெங்காயம் வரும் வரை வெங்காயத்தின் விலையானது உயரத்தான் செய்யும்.

ஊட்டியில் பெய்த மழை காரணமாக கேரட் விலையும் அதிகரித்து உள்ளது. கோயம்பேட்டில் ஒரு கிலோ கேரட் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று மழையில் முருங்கை பூக்கள் உதிர்ந்து விட்ட காரணத்தால் முருங்கைக்காய் விலையும் அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News