செய்திகள்
தற்கொலை

திருவண்ணாமலையில் அரிசி கடை அதிபர் தீக்குளித்து தற்கொலை- போலீஸ் விசாரணை

Published On 2020-10-20 08:39 GMT   |   Update On 2020-10-20 08:39 GMT
திருவண்ணாமலையில் அரிசி கடை அதிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வேடியப்பன் கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 56). இவர் திருவண்ணாமலையில் அரிசி கடை வைத்துள்ளார். இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு அருண் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். அருண் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மகள் என்ஜினீயரிங் படித்துள்ளார். மகளின் கல்லூரிப் படிப்பிற்கு திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் ரூ.4 லட்சம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

வங்கியை சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரனிடம் கடனை திருப்பி செலுத்துமாறு கடந்த ஒரு மாதமாக அடிக்கடி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் புதிதாக வீடு கட்டியது தொடர்பாக பல லட்சம் கடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்த ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்க சென்றார். அதிகாலை சுமார் 3 மணி அளவில் ரவிச்சந்திரனின் அலறல் சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது ரவிச்சந்திரன் பக்கத்து வீட்டின் மாடியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

தீக்குளிப்பு சம்பவம் நடைபெற்ற வீட்டில் கடந்த சில மாதங்களாக யாரும் குடியிருக்காமல் பூட்டியே இருந்து உள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ரவிச்சந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரன் ஏன் பக்கத்து வீட்டு மாடிக்கு சென்று தற்கொலை செய்து கொண்டார்?, கடன் தொல்லையால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?, என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News