செய்திகள்
கண்ணாடி உடைக்கப்பட்ட காரை காணலாம்

கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை

Published On 2020-10-19 06:47 GMT   |   Update On 2020-10-19 06:47 GMT
கன்னியாகுமரியில் தொழிலதிபர் கார் கண்ணாடியை உடைத்து 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:

நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52), தொழிலதிபர். இவர் தற்போது குடும்பத்துடன் சென்னையில் தங்கியுள்ளார். நேற்றுமுன்தினம் செந்தில்குமார் சென்னையில் இருந்து தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் சொந்த ஊரான காவல்கிணறுக்கு காரில் வந்தார்.

அவர்கள் நேற்று அதிகாலையில் கன்னியாகுமரியை சுற்றி பார்ப்பதற்காக காரில் சென்றனர். காரை பழைய பஸ் நிலையம் ரவுண்டானா பகுதியில் நிறுத்தி விட்டு சூரிய உதயத்தை பார்க்க சென்றனர். அப்போது, காருக்குள் ஒரு பையில் 10 பவுன் நகைகள் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை வைத்திருந்தனர்.

சூரிய உதயம் பார்த்த பின்பு திரும்ப வந்த போது காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் காருக்குள் பார்த்த போது, பையில் வைத்திருந்த 10 பவுன் நகைகள், செல்போன் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி கார் கண்ணாடியை உடைத்து நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News