செய்திகள்
மழை

சிவகாசியில் திடீர் மழை- வாகன ஓட்டிகள் அவதி

Published On 2020-10-19 06:40 GMT   |   Update On 2020-10-19 06:40 GMT
சிவகாசியில் நேற்று திடீரென மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
சிவகாசி:

சிவகாசியில் நேற்று காலை முதல் மாலை வரை கடுமையான வெயில் இருந்து வந்த நிலையில் மாலை 5 மணிக்கு பலத்த இடியுடன் திடீரென மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து 1 மணி நேரத்துக்கும் மேல் மழை பெய்தது.

இதனால் நகரின் தாழ்வான பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது. பஸ் நிலையம் உள்ள பகுதி மிகவும் தாழ்வாக இருப்பதால் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் இருந்து மழை நீர் வெள்ளம் போல் பஸ் நிலையத்துக்குள் வந்தது. இதனால் பஸ் நிலையத்தில் தெப்பம்போல் மழைநீர் தேங்கி கிடந்தது.

அதேபோல் என்.ஆர்.கே.ஆர்.ரோட்டில் மழை நீர் பெரும் அளவில் தேங்கி கிடந்தது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதேபோல் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ஜக்கம்மாள் கோவில் அருகில் மழை நீர் மற்றும் அதே பகுதியில் இருக்கும் வீடுகளில் இருந்து வெளியேறிய கழிவுநீர் இரண்டும் கலந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தியது.

அந்த பகுதியை கடந்து செல்வதில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர். இந்த பகுதியில் உள்ள அனைத்து வாருகால்களும் மண் மேவி இருப்பதால் மழைக்காலங்களில் இதுபோன்று கழிவுநீர் ரோட்டில் தேங்கும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க அந்த பகுதியில் உள்ள வாருகால்களை உடனே தூர்வார வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் நேற்று மாலை 1 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் சிவகாசி, திருத்தங்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் பட்டாசு உற்பத்தியில் எவ்வித பாதிப்பும் இல்லை.
Tags:    

Similar News