புரட்டாசி மாத அமாவாசையையொட்டி திருச்சி அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானவர்கள் குவிந்தனர்.
இந்தநிலையில் புரட்டாசி மாத கடைசி நாளான நேற்று 2-வது முறையாக அமாவாசை வந்தது. இதனால் முதல் அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் தவித்தவர்கள் நேற்று நீர்நிலைகளுக்கு சென்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். காவிரி ஆற்றங்கரையில் உள்ள திருச்சி அம்மாமண்டபம் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க தடையேதும் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து திருச்சி அம்மாமண்டபம் படித்துறையில் நேற்று அதிகாலை முதலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக உறவினர்கள் குடும்பத்தோடு அங்கு திரண்டனர். கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். இருப்பினும் கொரோனா அச்சம் ஏதும் இன்றி, சமூக விலகல் இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசங்கள் அணியாமலும் பலர் தர்ப்பணம் கொடுக்க வந்தனர்.
காவிரி ஆற்றில் குளித்துவிட்டு படித்துறையில் புரோகிதர்கள் மந்திரம் ஓத தர்ப்பணம் கொடுத்தனர். மறைந்த தாத்தா, பாட்டி, பெற்றோர் மற்றும் உறவினர்களை நினைத்து எள், அரிசி, கற்பூரம், ஊதுபத்தி, வாழைக்காய், வாழைப்பழம், காய்கறிகள், சாப்பாடு உருண்டை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர்.
இதுபோல காவிரிக்கரையோரம் உள்ள கருடமண்டபத்திலும் ஏராளமானவர்கள் குவிந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும் முசிறி, தா.பேட்டை, ஜீயபுரம், தொட்டியம் உள்ளிட்ட பகுதியில் காவிரி பாயும் இடங்களிலும், நீர் நிலைகளிலும் புனித நீராடிவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.