செய்திகள்
விபத்து

ஆற்றுப்பாலத்தின் தடுப்புச்சுவர் மீது ஆம்னி பஸ் மோதல்- 15 பேர் காயம்

Published On 2020-10-15 10:48 GMT   |   Update On 2020-10-15 10:48 GMT
விழுப்புரம் அருகே ஆற்றுப்பாலத்தின் தடுப்புச்சுவர் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பயணிகள் 15 பேர் காயமடைந்தனர்.
விழுப்புரம்:

தென்காசியில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ் ஒன்று சென்னைக்கு புறப்பட்டது. பஸ்சில் 32 பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை களக்காட்டை சேர்ந்த செபஸ்டியன் (வயது 36) என்பவர் ஓட்டினார். இந்த பஸ் நேற்று அதிகாலை விழுப்புரம் தாண்டி வந்து கொண்டிருந்தது. விழுப்புரத்தை கடந்து பேரங்கியூர் பகுதியில் அதிகாலை 4.20 மணியளவில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் அரியலூர்- சென்னை எண்ணூருக்கு சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியது. மோதிய வேகத்தில் அந்த பஸ், அங்குள்ள தென்பெண்ணையாற்று பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ் டிரைவர் செபஸ்டியன் மற்றும் பயணிகளான சென்னையை சேர்ந்த பசுபதி (28), ஆலங்குப்பம் சங்கரலிங்கம் (56), விருதுநகர் அமிர்தராஜ் (21), தென்காசி பெரியசாமி (32), சண்முகம் (28), ரஜினி (22), கோபாலகிருஷ்ணன் (59) மதுரை தர்மராஜ் மகள் ஐஸ்வர்யா (19), ராஜபாளையம் சிவக்குமார் (25) உள்பட 15 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 15 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன் பிறகு மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான பஸ் அப்புறப்படுத்தப்பட்டது.

இந்த விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News