சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்தான் என திருக்கோவிலூரில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஏ.ஆர்.வாசிம்ராஜா மற்றும் நிர்வாகிகளுடன் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து ஒரு சில தொகுதிகளை பிரித்தெடுத்து புதிய கட்சி மாவட்டம் உருவாக்குவது குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் கே.எஸ். அழகிரி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் கூறுகிறார். ஆனால் கொரோனாவை காரணம் காட்டி மோடி தப்பிக்க பார்க்கிறார். தவறான ஜி.எஸ்.டி கொள்கையும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் நாட்டை பெரும் பின்னடைவுக்கு கொண்டுசென்றுவிட்டது. தனியார் மற்றும் பொதுத்துறை இணைந்து செயல்படவேண்டும். இதுவே கலப்பு பொருளாதாரம் ஆகும். ஆனால் மோடி அரசு பொதுத்துறையை அழித்து தனியார் துறையை வளர்க்கின்றது. பொதுப்போக்குவரத்தை அடித்தட்டு மக்களும், ஏழை, எளிய மக்களும் பயன்படுத்தி வந்த நிலையில் அது இன்னமும் தொடங்கவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க-காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி பலமாகவே உள்ளது. நாங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறோம். பாராளுமன்ற தேர்தலின்போது ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமு.க கூட்டணி கட்சிகளின் சார்பில் முதல் அமைச்சர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்தான் இருப்பார். இது கூட்டணி கட்சிகளின் ஒத்த கருத்து ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.