செய்திகள்
தி.மு.க. முப்பெரும் விழாவில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பேசிய காட்சி.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதால் தமிழகம் அடைந்த பயன் என்ன? - அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கேள்வி

Published On 2020-10-11 23:02 GMT   |   Update On 2020-10-11 23:02 GMT
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதால் தமிழகம் அடைந்த பயன் என்ன? என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:

திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற முப்பெரும் விழாவில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த செப்டம்பர் 15-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த முப்பெரும் விழாவில் தான் ‘எல்லோரும் நம்முடன்’ என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை நான் தொடங்கி வைத்தேன். இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக 11 லட்சம் புதிய உறுப்பினர்கள் தி.மு.க.வில் இணைந்துள்ளார்கள் என்றால் இது யாராலும் செய்து காட்ட முடியாத வரலாற்றுச் சாதனை ஆகும்.

சூழ்நிலைதான் இலக்கை தீர்மானிக்கிறது, சூழ்நிலைதான் நமது செயல்பாட்டை வடிவமைக்கிறது என்று சொல்வார்கள். கொரோனா காலமானது நமக்கு ஒரு நெருக்கடியைக் கொடுக்கிறது. அந்த நெருக்கடியில் இருந்து மீண்டு கட்சிப் பணியை தொய்வில்லாமல் ஆற்றுவது எப்படி என்பதை இந்த உலகத்துக்குக் காட்டிவிட்டோம்.

தொழில் வளர்ச்சி, தமிழக வளர்ச்சி, தமிழ்நாட்டு இளைஞர் வளர்ச்சி ஆகியவற்றுக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாக காரணமானவர் தலைவர் கருணாநிதி. ஒரு தொழிற்சாலையை தொடங்குவதற்கான அனைத்து சாதகமான விஷயங்களையும் செய்து கொடுத்த ஆட்சி முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சி. அதனால் தான் தொழில் துறையில் இந்தியாவிலேயே 3-வது இடத்தில் தமிழகத்தை கொண்டு போய் நிலை நிறுத்தினார் முதல்- அமைச்சர் கருணாநிதி.

ஆனால் இன்றைய நிலைமை என்ன?. சில நாட்களுக்கு முன்னால், ஒரு அறிவிப்பை முதல்-அமைச்சர் செய்திருந்தார். ‘தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்’ என்பதான் அந்த செய்தி. இன்னும் 6 மாதத்தில் ஆட்சியே முடியப்போகிறது. ஆனால் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம் என்று சொல்கிறார் என்றால் எந்த நாட்டில் வாழ்கிறார் எடப்பாடி பழனிசாமி?.

2011-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டை ஆள்கிறது அ.தி.மு.க., பொருளாதார வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள்? கொண்டு வந்த திட்டங்கள் என்ன? திறந்து வைத்த பெரிய தொழிற்சாலைகள் என்ன? எத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தீர்கள்?. ஒரு முறையல்ல, 2 முறை உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினீர்களே? எத்தனையாயிரம் கோடி, எத்தனை லட்சம் கோடி முதலீடு வந்தது? முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் நாடு நாடாக போனீர்களே?

இதனால் தமிழ்நாடு அடைந்த பலன் என்ன? எத்தனை தொழிற்சாலைகளை கொண்டு வந்தீர்கள்? அதற்கு முதலில் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லட்டும். அதன்பிறகு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கலாம். எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்கவில்லை. ஜெயலலிதா இறந்து போனதால் பதவியைப் பெற்றவர் எடப்பாடி பழனிசாமி.

எனவே இவர் முதல்-அமைச்சர் ஆவதற்கு தமிழ்நாட்டு மக்கள் வாக்களிக்கவும் இல்லை. வாக்களிக்கப் போவதும் இல்லை.

இது அவர்களுக்கும் தெரியும். அதனால் தான் இருக்கும் காலம் வரை சுருட்டிக் கொண்டு ஓடுவதற்கு தயாராகி விட்டார்கள். இவர்கள் எங்கும் தப்ப முடியாது. தி.மு.க. ஆட்சி அமையும் போது இவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News