செய்திகள்
முதல்வர் பழனிசாமி.

அதிமுக புதிய நிபந்தனையை பாமக, தேமுதிக, பாஜக ஏற்குமா?- தலைவர்கள் மவுனத்தால் சலசலப்பு

Published On 2020-10-11 07:18 GMT   |   Update On 2020-10-11 07:18 GMT
எடப்பாடி பழனிசாமியை முதல்- அமைச்சர் வேட்பாளராக அதிமுக அறிவித்த விஷயத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மவுனமாக இருப்பதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை:

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.

அ.தி.மு.க. கூட்டணி ஒரு அணியாகவும், தி.மு.க. கூட்டணி இன்னொரு அணியாகவும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் முதல்- அமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சி தலைவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர்.

அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை அ.தி.மு.க.வினர் முழு மனதோடு ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தொடர்பாக வெளிப்படையான எந்த கருத்தையும் தெரிவிக்காமல் மவுனமாகவே உள்ளனர். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டணியில் உள்ள பா.ம.க., தே.மு.தி.க., பாரதீய ஜனதா உள்ளிட்ட கட்சிகள், எடப்பாடி பழனிசாமியை முதல்- அமைச்சர் வேட்பாளராக ஏற்க தயங்குகின்றனவோ? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி, அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமியை முதல்- அமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் மட்டுமே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற முடியும் என்பதே அதுவாகும்.

தேசிய கட்சியாக இருந் தாலும் மாநில கட்சியாக இருந்தாலும் சரி, அனைத்து கட்சிகளுக்கும் இது பொருந் தும் என்கிற ரீதியில் அவரது கருத்து அமைந்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய கட்சியான பா.ஜனதாவில் கூட்டணி மற்றும் முதல்- அமைச்சர் வேட்பாளர் ஆகியவற்றில் இருவேறு கருத்துக்கள் நீடித்து வருகின்றன. மாநில தலைவர் முருகன், அ.தி.மு.க.வுடன் கூட்டணி நீடிப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார்.

அதேநேரத்தில் பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்து வேறு மாதிரியாக உள்ளது. மக்களவை தேர்தலுக்காக மட்டுமே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டது என்றும், வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறலாம் என்றும், தி.மு.க.வுடன் கூட கூட்டணி வைக்கலாம் என்று கூறி இருந்தார்.

இது அரசியல் களத்தில் பேசும் பொருளாக மாறி புதிய பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் தமிழக பா.ஜனதா தலைவரான முருகன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரா? என்று நிருபர்கள் முருகனிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், “அதுதான் தெளிவாக சொல்லி விட்டேனே” என்று கூறிவிட்டு சென்று விட்டார். அதற்கு விரிவாக பதில் அளிக்கவில்லை. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன்மூலம் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் பா.ஜனதா தலைவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறதோ? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இது பற்றி பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் சிலரை தொடர்பு கொண்டு கேட்டபோது, டெல்லி தலைமைதான் இந்த குழப்பத்தை தீர்க்க வேண்டும. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியாததால்தான் இங்குள்ளவர்கள் ஆளுக்கொரு கருத்தை சொல்கிறார்கள்.

டெல்லி தலைமை நேரடியாக அறிவிக்காவிட்டாலும் மாநில தலைமை மூலம் அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தல் அன்புமணி ராமதாசை முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்திய பா.ம.க., பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருந்தது.

சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே பா.ம.க. நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்த வி‌ஷயத்தில் பா.ம.க.வின் நிலைப்பாடு என்ன? என்பதும் இன்னும் தெளிவுப்படுத்தப்படாமலேயே உள்ளது.

பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அவரது டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.

“நேற்றைய பொழுது நிஜமில்லை. நாளைய பொழுது நிச்சயமில்லை” என்று டுவிட்டரில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று பா.ம.க. கூறி உள்ளது. இருப்பினும் கூட்டணி மற்றும் முதல்வர் வேட்பாளர் ஆகியவற்றை மனதில் வைத்தே ராமதாசின் டுவிட்டர் பதிவு அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளராக மக்கள் நல கூட்டணியில் முன்நிறுத்தப்பட்ட விஜயகாந்தும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலேயே இடம் பெற்று இருந்தார்.

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜயகாந்தின் கட்சியான தே.மு.தி.க.வும் காய் தகர்த்தி வருகிறது. விஜயகாந்த்தை ‘கிங்’ஆக பார்க்கவே தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள்.

தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தே.மு.தி.க.வினரின் விருப்பமாக உள்ளது என்று அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா கூறியுள்ளார்.

இதன்மூலம் விஜயகாந்தை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தே.மு.தி.க.வினர் விரும்புவதும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவித்தது தொடர்பாக தே.மு.தி.க.வும் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காமலேயே உள்ளது.

ஜெயலலிதா இருந்த வரையில் இதுபோன்ற முதல்-அமைச்சர் வேட்பாளர் சர்ச்சை அ.தி.மு.க.வில் ஏற்படவில்லை. அவர் சொல்வதே கட்சியிலும், கூட்டணியிலும் வேதவாக்காக இருந்து வந்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முறையாக முதல்-அமைச்சர் வேட்பாளரை அறிவித்து, அதனை கூட்டணி கட்சி தலைவர்களையும் ஏற்க செய்ய வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனை மனதில் வைத்து தான் கே.பி.முனுசாமி, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள் மட்டுமே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க.வின் இந்த அறிவிப்பு துணிச்சலான அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கூட்டணி கட்சிகள் அ.தி.மு.க.வின் இந்த நிபந்தனையை ஏற்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News