செய்திகள்
தமிழக அரசு

கைவிரல் ரேகையில் அங்கீகாரம் பெறாவிட்டால் மற்ற முறைகளை கையாள வேண்டும்- ரேஷன் கடைகளுக்கு அரசு உத்தரவு

Published On 2020-10-09 01:39 GMT   |   Update On 2020-10-09 01:39 GMT
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின்படி, பொருட்கள் வழங்குவதற்கு முன்னதாக வைக்க வேண்டிய கைவிரல் ரேகைக்கு அங்கீகாரம் கிடைக்காவிட்டால், மற்ற முறைகளை கையாண்டு பொருட்களை வழங்க வேண்டும் என்று ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

அனைத்து கூட்டுறவு, மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டம், 1-ந்தேதி முதல் 32 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ரேஷன் கடைகளுக்கு வரும் அட்டைதாரர்களுக்கு கைவிரல் ரேகை அங்கீகாரம் மூலம் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

இந்த திட்டம் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் அதே கிராமம் மற்றும் வார்டில் உள்ள ரேஷன் கடைகளில் மட்டுமின்றி மற்ற ரேஷன் கடைகளிலும் பொருட்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே கடைகளில் பொருட்கள் இருப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். இதில் புகார்கள் வந்துவிடக் கூடாது.

வேறு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்துள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் ஒரு கிலோ அரிசி ரூ.3 என்றும், ஒரு கிலோ கோதுமை ரூ.2 என்றும் விற்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் தங்களுக்கான பொருட்கள் பெற, உறவினர்கள், தெரிந்தவர்களை நியமிக்கலாம். அதற்கு உரிய படிவத்தில் அவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் அளிக்க வேண்டும்.

அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் அல்லது உதவி ஆணையர் அலுவலகத்தில் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பின்னர் அவர்கள் மூலம், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு வரும் ஓடிபி என்ற ஒருமுறை கடவுச் சொல்லை வைத்து பொருட்களை பெறலாம். இதற்கு தனி பதிவேட்டை பராமரிக்க வேண்டும்.

கைவிரல் ரேகையை அங்கீகரித்து பொருட்களை வழங்க இயலாத நிலையில் அரசு ஏற்கனவே கடந்த ஆகஸ்டு 18-ந்தேதி கூறியுள்ள வழிமுறைகளின்படி பொருட்கள் வழங்க வேண்டும். பொருட்கள் வழங்க கைவிரல் ரேகை அங்கீகாரம் முதல் நிலையாகும்.

அது முடியாதபட்சத்தில், ஆதார் (ஓடிபி) முறை, ஆதார் அட்டையை ஸ்கேன் செய்யும் முறை, ரேஷன் அட்டைதாரரின் பதிவு செய்த செல்போனுக்கு ஓடிபி அனுப்பும் முறை, மின்னணு ரேஷன் அட்டையை (ஸ்மார்ட் கார்டு) ஸ்கேன் செய்யும் முறை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பின்பற்றி பொருட்கள் வழங்க வேண்டும்.

கைவிரல் ரேகையை அங்கீகரிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக யாருக்கும் பொருட்கள் வழங்காமல் இருந்துவிடக் கூடாது. மற்ற நடைமுறையை பின்பற்றி பொருட்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News