செய்திகள்
கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபு, கல்லூரி மாணவி சவுந்தர்யாவை திருமணம் செய்து கொண்ட போது எடுத்த படம்.

எம்எல்ஏ பிரபு மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு

Published On 2020-10-08 06:17 GMT   |   Update On 2020-10-08 11:54 GMT
காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தனது மனைவியை நாளை மதியம் நேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அ.தி.மு.க.வை சேர்ந்த பிரபு. இவர் சவுந்தர்யா என்ற கல்லூரி மாணவியை கடந்த 5-ந்தேதி அன்று திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் இவருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தியாகதுருகத்தைச் சேர்ந்த அந்த பெண்ணின் தந்தை சாமிநாதன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், தனது மகள் சவுந்தர்யா, திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும், தன்னுடைய மகளை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆசைவார்த்தை கூறி கடத்தி விட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தன்னை சிலர் மிரட்டுகிறார்கள். எனவே தனது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே தம்மை யாரும் கடத்தவில்லை என்று மணப்பெண் சவுந்தர்யா நேற்று முன்தினம் வீடியோ வெளியிட்டார். மேலும் சவுந்தர்யாவை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யவில்லை என எம்எல்ஏ பிரவும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் சாமிநாதன் தாக்கல் செய்த மனு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தனது மனைவியை நாளை மதியம் நேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News