செய்திகள்
மெட்ரோ ரெயில்

சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம்

Published On 2020-10-06 02:12 GMT   |   Update On 2020-10-06 06:21 GMT
‘சென்னையில் முதல் கட்ட விரிவாக்க பகுதிகளில் பணிகள் நடந்து வரும் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன’ என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை விமான நிலையத்துக்கு 2 வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்ட மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் பயணிகள் சேவை நடந்து வருகிறது. இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழித்தட பாதை நீட்டிப்பு பணி ரூ.3 ஆயிரத்து 700 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.

இந்த வழித்தடத்தில் தியாகராயர் கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, டோல்கேட், தாங்கல், கவுரி ஆஸ்ரமம், திருவொற்றியூர், விம்கோ நகர் உள்பட 8 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒருசில குறிப்பிட்ட ரெயில் நிலையங்களுக்கு பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன.

இந்த வழித்தடத்தில் தண்டவாளம், சிக்னல்கள், ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வருகிற டிசம்பர் மாதம் இறுதியில் நடத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு பெயரை தண்டையார்பேட்டை என்று மாற்றப்பட்டு உள்ளது. அதேபோல், ஏற்கனவே உள்ள தண்டையார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு புது வண்ணாரப்பேட்டை என்றும், தாங்கல் ரெயில் நிலையத்திற்கு காலடிபேட்டை என்றும், கவுரி ஆஸ்ரமம் ரெயில் நிலையத்திற்கு திருவொற்றியூர் தேரடி என்றும் மாற்றப்பட்டு உள்ளது. இதற்கு முறையாக அரசும் அனுமதி அளித்து உள்ளது. அப்பகுதி மக்களுக்கு மிகவும் அறிமுகமான பகுதிகளாக இருப்பதற்காக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.

மேற்கண்ட தகவலை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Tags:    

Similar News