செய்திகள்
கலெக்டர் மலர்விழி

இணையதளம் மூலம் பதிவு செய்த 52 பேருக்கு வேலைவாய்ப்பு- கலெக்டர் தகவல்

Published On 2020-10-05 05:19 GMT   |   Update On 2020-10-05 05:19 GMT
தர்மபுரி மாவட்டத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்த 52 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் இணையதளம் மூலம் பதிவு செய்த 52 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் நிறுவனங்களையும் தமிழக அரசு ஒரு இணையதளம் வழியாக இணைத்து உள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பை தேடும் இளைஞர்களுக்கு தனியார்த்துறையில் வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்கத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் வடிவமைக்கப்பட்ட தனியார்த்துறை வேலைவாய்ப்பு இணையம் தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தனியார்த்துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், இந்த இணையதளத்தில் நேரடியாக தங்களின் விவரங்களை பதிவு செய்து, தங்களது கல்வித்தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கு ஏற்ப பணி வாய்ப்புகளை பெறுவதற்கு பதிவு செய்ய வேண்டும். இதேபோன்று தனியார்த்துறையை சேர்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் பதிவு செய்து தங்களது நிறுவன காலி பணியிடங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, தகுதியான நபர்களை தேர்வு செய்து கொள்ளவும் வழிவகை செய்கிறது.

தற்போது வரை இந்த இணையதளத்தில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 நிறுவனங்களும், 1,079 வேலை நாடுனர்களும் பதிவு செய்துள்ளனர். மேலும் இதுவரை இந்த இணையதளம் மூலம் பதிவு செய்து தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட 52 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்கள் ஆயத்த ஆடை தயாரிப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவ்வாறு அதில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News