செய்திகள்
கோப்புப்படம்

வேறொருவரின் உடலை வீட்டுக்கு அனுப்பி வைத்த விவகாரம்- விளக்கம் அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

Published On 2020-10-01 02:31 GMT   |   Update On 2020-10-01 02:31 GMT
உயிருடன் இருப்பவரை இறந்ததாக கூறி வேறொருவரின் உடலை ஒப்படைத்தது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் (வயது 55) என்பவர் சுயநினைவின்றி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் செப்டம்பர் 28-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர், வேறொரு வார்டுக்கு மாற்றப்பட்டார். சிறிது நேரத்தில், திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையைச் சேர்ந்த பாலர் (52) என்பவர் சுய நினைவிழந்த நிலையில், அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கொளஞ்சியப்பன் சிகிச்சை பெற்று வந்த படுக்கையில், பாலருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நள்ளிரவு இறந்துபோனார். ஆனால், ஆஸ்பத்திரி நிர்வாகம் கொளஞ்சியப்பன் இறந்து போனதாக அறிவித்து உடலை ஒப்படைத்தது. கொளஞ்சியப்பனின் உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்ற போது தான் அது பாலரின் உடல் என்பது தெரியவந்தது. இதன்பின்பு, பாலரின் உறவினர்களிடம் ஆஸ்பத்திரி நிர்வாகம் உடலை ஒப்படைத்தது.

இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார். பின்னர், இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் இயக்குனர் 2 வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Tags:    

Similar News