செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தொற்று தடம் கண்டறிய வீடு, வீடாக சோதனை - தமிழக அரசு உத்தரவு

Published On 2020-09-30 21:56 GMT   |   Update On 2020-09-30 21:56 GMT
கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அந்த நோய் தொற்று தடம் கண்டறிய வீடு, வீடாக துல்லியமாக சோதனை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழக தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார நிபுணர்கள் ஆகியோரின் பரிந்துரையின்படியும், மத்திய அரசின் உத்தரவின்படியும், மூத்த அமைச்சர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின்படியும் தமிழகத்தில் இம்மாதம் 31-ந்தேதி நள்ளிரவு 12 மணிவரை ஊரடங்கை மேலும் நீடித்து உத்தரவிடப்படுகிறது.

அதோடு தற்போதுள்ள கட்டுப்பாடுகளில் திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. திருமணம் தொடர்பான கூடுகைகளில் 50 பேருக்கு மேற்பட்டோர் பங்கேற்க கூடாது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ளக் கூடாது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அனைத்திலும் தளர்வு இல்லாத ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும். தொற்றின் சங்கிலித் தொடரை உடைக்கும் வகையில் அங்கு மாவட்ட நிர்வாகத்தால் துல்லியமாக எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது, மருத்துவ அவசர காரியங்கள் தவிர வேறு எதற்காகவும் இந்த பகுதிகளில் ஆட்கள் நடமாட்டம் இருக்க கூடாது. அங்கு தொற்றை தடம் அறியும் சோதனை வீடு, வீடாக துல்லியமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதிகள் பற்றிய அறிவிப்பு, அந்தந்த மாவட்ட கலெக்டரால் இணையதளங்களில் வெளியிடப்பட வேண்டும்.

பயணிகள் ரெயில் இயக்கம், உள்ளூர் பயணிகள் விமான போக்குவரத்து, வந்தேபாரத் போன்ற போக்குவரத்துகள், இந்திய கடற்படையினரின் போக்குவரத்து போன்றவை ஏற்கனவே உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

தொற்றுக்கான வாய்ப்பை அறிந்து கொள்ள வகை செய்யும் ஆரோக்கிய சேது செயலி, பணியிடங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும். இதுபற்றிய தகுந்த விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவ அவசரங்கள் தவிர, கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், பிற நோய்க்கு ஆளானவர்கள், 10 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

பணியிடங்கள், பயணங்கள், பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளி குறைந்தபட்சம் 6 அடி இருக்க வேண்டும். பொது இடங்களில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும். மது அருந்துதல், குட்கா, புகையிலை, பான் உட்கொள்ளுதல் தொடர்ந்து தடை செய்யப்படுகிறது.

ஊரடங்கு காலகட்டத்தில் குற்ற விசாரணை முறைச் சட்டம் 144-ம் பிரிவின்படி, ஓரிடத்தில் 5 பேருக்கு மேல் கூட்டம் கூடக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News