செய்திகள்
சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணியை கனிமொழி எம்.பி. பார்வையிட்ட போது எடுத்த படம்.

ஏரல் அருகே சிவகளையில் அகழாய்வு பணிகளை கனிமொழி எம்.பி பார்வையிட்டார்

Published On 2020-09-30 09:16 GMT   |   Update On 2020-09-30 09:16 GMT
ஏரல் அருகே சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை கனிமொழி எம்.பி. நேற்று பார்வையிட்டார்.
ஏரல்:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளையில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள சிவகளை பரம்பு பகுதியில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. அந்த பகுதியில் 31 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த முதுமக்கள் தாழிகளில் இருந்து சிறிய சிறிய கிண்ணங்கள், நெல்மணிகள், அரிசி உள்ளிட்ட 70 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை தொல்லியல் துறையினர் பொதுமக்கள் பார்வைக்காக தொழில் துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் திறந்து வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை கனிமொழி எம்.பி., மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி.வெங்கடேசன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிவகளையில் நடைபெறும் அகழாய்வு இடத்துக்கு வந்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் பிரபாகரன், தங்கத்துரை ஆகியோர் ஆய்வு பணி குறித்து விளக்கி கூறினார். மேலும் அங்கு கிடைக்க பெற்று சேகரித்து வைத்துள்ள பொருட்களை காண்பித்து விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து கனிமொழி எம்.பி கூறுகையில், ‘ஆதிச்சநல்லூர், சிவகளையில் நடைபெறும் தொல்லியல் துறை அகழாய்வு பணி விரைவாக நடைபெறுவதற்கு மத்திய, மாநில அரசும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்த பணியால் தமிழகத்தின் தொன்மை உலகத்திற்கு தெரியவரும்‘ என்றார். அப்போது கட்சியினர் பலர் உடன் சென்றனர்.
Tags:    

Similar News