நீட் தேர்வு நிபந்தனைகளை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையத்திலேயே பேனா வழங்கப்படும். மாணவர்கள் பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், கால்குலேட்டர் உள்ளிட்ட எதையும் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
செல்போன், புளூடூத், பென் டிரைவ், கை கடிகாரம், கை கேமரா, காதணிகள், வளையல் போன்ற ஆபரணங்களுக்கு அனுமதியில்லை. மென்மையான நிறத்தில் ஆடையிருக்க வேண்டும். முழுக்கை சட்டை அணியக்கூடாது. தேர்வு மையத்துக்குள் ஷு அணியக் கூடாது, செருப்பு மட்டும் அனுமதிக்கப்படும். குறிப்பாக திருமணமான பெண்கள் புனிதமாக கருதும் தாலியைக்கூட கழற்றும்படி அதிகாரிகள் நிர்பந்தம் செய்கின்றனர்.
நீட் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்றும்படி வற்புறுத்தகூடாது, சிசிடிவி பொருத்தி கண்காணிக்கும் நிலையில் இந்த கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானது, எனவே நீட் தேர்வு நிபந்தனைகளை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.