செய்திகள்
கலெக்டர் அலுவலகம் கட்டப்பட உள்ள இடத்தில் முகப்பு எந்த பகுதியில் அமைப்பது என பொறியாளர் ஆய்வு

புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள்- பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

Published On 2020-09-29 12:42 GMT   |   Update On 2020-09-29 12:42 GMT
கள்ளக்குறிச்சியில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான ஆயத்த பணிகளை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டத்தை 2-ஆக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 26-11-2019 அன்று தொடங்கி வைத்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தற்காலிகமாக அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தின் ஒரு பகுதியில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வீரசோழபுரத்தில் 40.18 ஏக்கர் பரப்பளவில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு ரூ.104 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான கட்டுமான பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.

இதையடுத்து புதிய கலெக்டர் அலுவலகம் அமைய உள்ள இடத்தில் உள்ள செடி-கொடிகள், புதர்களை அகற்றி நிலத்தை சமன் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதை பொதுப்பணித்துறை(கட்டுமானம்) வேலூர் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகர் நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் அலுவலகம் கட்டிட முகப்பு பகுதி எந்த திசையை நோக்கி அமையவேண்டும், தேசியநெடுஞ் சாலையிலிருந்து எவ்வளவு தூரத்தில் முகப்பு கட்டிடம் கட்டவேண்டும், பாதை அமைத்தல், கட்டிட அமைப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

அப்போது விழுப்புரம் செயற்பொறியாளர் வெங்கடாசலம், கள்ளக்குறிச்சி மாவட்ட உதவி செயற்பொறியாளர் கவுதமன், உதவி பொறியாளர்கள் பாலபாரதி, யாசர்அராபத் ஆகியோர் உடன் இருந்தனர்.

புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 மாடிகளுடன் கட்டப்பட உள்ளது. இதில் 66 அரசு துறை அலுவலகங்கள் செயல்பட உள்ளது. மேலும் இந்த வளாகத்தில் மாவட்ட கலெக்டர் குடியிருப்பு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் குடியிருப்பு, கவாத்து மைதானம், விளையாட்டு மைதானம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News