செய்திகள்
ரேஷன்கடையில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்யப்பட்டதை காணலாம்

குமரி ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வந்தது

Published On 2020-09-29 10:05 GMT   |   Update On 2020-09-29 10:05 GMT
குமரி ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வந்தது.
நாகர்கோவில்:

ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும், பொருட்கள் வினியோகத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்யவும் பயோமெட்ரிக் முறை என்ற கைரேகை பதிவை அரசு கட்டாயமாக்கி உள்ளது. அதாவது ஸ்மார்ட் கார்டில் இடம்பெற்றிருக்கும் குடும்ப தலைவரோ அல்லது குடும்ப உறுப்பினரோ மட்டுமே ரேஷன் கடைகளுக்கு சென்று தங்களது கைரேகையை பதிவு செய்து ஒப்புதல் அளித்தபிறகே பொருட்கள் வழங்கப்படும். இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பயோமெட்ரிக் எந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள 764 ரேஷன் கடைகளுக்கும் பயோ மெட்ரிக் எந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றிய பயிற்சியும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று முதல் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வினியோகம் அமலுக்கு வந்தது. அதன்படி ரேஷன் கடைகளுக்கு பொருட் கள் வாங்க சென்ற கார்டுதாரர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பயோ மெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்கிச் சென்றனர். சில ரேஷன் கடைகளின் ஊழியர்களுக்கு அந்த எந்திரத்தை கையாள்வது தொடர்பாக சிறு, சிறு சந்தேகங்களும் ஏற்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட என்ஜினீயர்களிடம் கேட்டு அறிந்து, நிவர்த்தி செய்து கொண்டனர்.

இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் உள்ள 764 ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வினியோகம் நேற்று முதல் தொடங்கியது. பயோமெட்ரிக் எந்திரத்தில் பொருட்கள் வாங்கச் செல்லும் ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகள் ஒத்துப் போகாத பட்சத்தில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை தெரிவித்து பொருட்களை வாங்கலாம். அந்த எண்ணும் மறந்து விட்டால் ஸ்மார்ட் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் எண் அதாவது பொருட்கள் வாங்கியதும் குறுஞ்செய்தி அனுப்பப்படும். செல்போன் எண்ணை தெரிவித்தால் அதற்கு ஒரு ஓ.டி.பி. வரும். அந்த எண்ணை ரேஷன் கடை ஊழியரிடம் தெரிவித்து பொருட்களை வாங்கிச் செல்லலாம். இவ்வாறு 3 முறைகளில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, சீனி, பாமாயில், மண்எண்ணெய் போன்றவற்றை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Tags:    

Similar News