செய்திகள்
செயற்குழு கூட்டத்திற்கு வந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ்

அ.தி.மு.க.வில் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும் -கே.பி.முனுசாமி தகவல்

Published On 2020-09-28 10:31 GMT   |   Update On 2020-09-28 10:31 GMT
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது 7ம் தேதி அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
சென்னை:

தமிழக சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படவேண்டும். கொரோனா பரவல் தீவிரமாக உள்ள போதிலும், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், அதை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. 

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அத்துடன், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்படும் முதல்வர் வேட்பாளர் குறித்த விவகாரம் எழுந்தது. தேர்தலுக்கு முன்பே முதலமைச்சர் வேட்பாளர் பெயரை அறிவிக்குமாறு ஒரு தரப்பினரும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என மற்றொரு தரப்பினரும் வலியுறுத்தினர். ஓ.பி.எஸ், ஈபிஎஸ் இடையேயும் காரசாரமான விவாதம் நடந்துள்ளது.

இவ்வாறு சுமார் 5 மணி நேரம் வரை நீடித்த செயற்குழு கூட்டம் பிற்பகல் நிறைவு பெற்றது. முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.பி. முனுசாமி, 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்றார். வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அறிவிப்பார்கள் என்றும் கே.பி.முனுசாமி கூறினார்.
Tags:    

Similar News