செய்திகள்
கோப்பு படம்.

கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடலை 5 மணிநேரம் அகற்றாததால் நோயாளிகள் போராட்டம்

Published On 2020-09-28 09:24 GMT   |   Update On 2020-09-28 09:24 GMT
தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடலை 5 மணிநேரம் அகற்றாததால் நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெண்கள் வார்டில் குழந்தைகள் உள்பட 50 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் என்.ஏ.எஸ். நகரை சேர்ந்த 70 வயது மூதாட்டி கொரோனா அறிகுறிகளுடன் கடந்த 20-ந்தேதி ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 23-ந்தேதி மூதாட்டிக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மூதாட்டி உயிரிழந்தார். இதனால் அங்கு சிகிச்சையில் இருந்த மற்ற நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர்.

மாலை 5 மணிக்கு உயிரிழந்த மூதாட்டியின் உடல் இரவு 9 மணியாகியும் அகற்றப்படவில்லை. இதனால் கொரோனா தொற்று தங்களுக்கு மேலும் அதிகரிக்கலாம் என்ற மற்ற நோயாளிகள் அச்சமடைந்தனர். 4 குழந்தைகள் உள்பட 50 நோயாளிகள் தனிமை வார்டில் இருந்து வெளியேறி போராட்டம் நடத்தினர். சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நோயாளிகள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்கவில்லை.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 5 மணிநேரத்துக்கு பின்பு மூதாட்டியின் உடல் அங்கிருந்த அப்புறப்படுத்தப்பட்டது. வார்டு முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தால் தான் வார்டுக்குள் வருவோம் என்று நோயாளிகள் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து வார்டு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அதன்பின்னரே நோயாளிகள் வார்டுக்கு திரும்பினர். இதனால் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News