செய்திகள்
கோப்புபடம்

கோவையில் கொரோனா பரவல் அதிகரிப்பு - பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகோள்

Published On 2020-09-28 06:10 GMT   |   Update On 2020-09-28 06:10 GMT
கோவையில் கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை:

கொரோனா பரவலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் மாநில அளவில் 20-வது இடத்தில் இருந்தது. தற்போது தினமும் 500-க்கும் மேலானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் தற்போது மாநில அளவில் கோவை மாவட்டம் 4-வது இடத்தில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கொரோனா தொற்றில் 31,500 பேர் பாதிக்கப்பட்டு 3-வது இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் செங்கல்பட்டும், முதல் இடத்தில் சென்னையும் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைவிட பாதிப்பு எண்ணிக்கை தினமும் 2 மடங்காக உயர்ந்து வருவதால் இன்னும் ஒருவாரத்துக்குள் கோவை மாவட்டம் தொற்றில் மாநில அளவில் 3-வது இடத்தை பிடிக்கும் நிலை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினார்கள். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றில் இருந்து 25 ஆயிரம் பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 4,900 பேர் சிகிச்சையில் உள்ளனர். 413 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதால் கோவை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

இ.எஸ்.ஐ. மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் இருப்பை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இ.எஸ்.ஐ. புதிய விடுதியில் ஆக்சிஜன் சப்ளை வசதியுடன் 120 படுக்கை, மற்றொரு கட்டிடத்தில் 80 படுக்கை வசதிகள் என்று ஐ.சி.யு. பிரிவுக்கான வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் ஐ.சி.யு. படுக்கை வசதி அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் தீவிரமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் தேவைப்படும் நிலைக்கு செல்பவர்களின் இறப்பு வாய்ப்பு அதிகரிக்கிறது. வெண்டிலேட்டர் தேவை உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவு. பல்வேறு உடல் உறுப்பு பாதிப்பு உள்ளவர்களுக்கே வெண்டிலேட்டர் தேவைப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்தவேண்டியது அவசியம். எனவே தேவையான அளவுக்கு ஆக்சிஜன் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களும் இன்னும் உஷாராகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.

இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News