செய்திகள்
அவுட் ஆப் சர்வீஸ் என்ற வாசகத்துடன் அட்டை தொங்க விடப்பட்டிருப்பதையும் படத்தில் காணலாம்.

திருப்பூரில் அடிக்கடி பழுதாகும் ஏ.டி.எம். எந்திரங்கள் பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதி

Published On 2020-09-27 18:10 GMT   |   Update On 2020-09-27 18:10 GMT
திருப்பூரில் ஏ.டி.எம். எந்திரங்களில் அடிக்கடி ஏற்படும் பழுதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அனுப்பர்பாளையம்:

டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் பின்னலாடை நகரம் மத்திய, மாநில அரசுகளுக்கு அன்னிய செலாவணியை ஈட்டி தருவதில் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் அங்கீகாரம் பெற்ற அரசு வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்து வங்கியின் கிளைகளும் இங்கு செயல்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்களின் வசதிக்காக அனைத்து வங்கிகளும் திருப்பூரின் முக்கிய பகுதிகளிலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் தங்களது ஏ.டி.எம். மையங்களை நிறுவி உள்ளன.

அது மட்டுமின்றி சி.டி.எம். எந்திரங்கள் மூலமாகவும் பணம் செலுத்தும் வசதி வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த நிலையில் தொழில் நகரமான திருப்பூரில் கடந்த சில மாதங்களாக ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-

தனியார் மற்றும் அரசு ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். அட்டையை உள்ளே நுழைத்து விட்டு பணம் வரும் என்று கையை நீட்டினால் பணம் வருவதில்லை. ஒருசில நிமிடங்கள் கழித்து உங்களது பரிவர்த்தனை ரத்து செய்யப்படுகிறது என்ற வாசகம் மட்டுமே வருகிறது. இதேபோல் பணம் எடுக்கும்போது தேவையான தொகையை எந்திரத்தில் குறிப்பிடும் போது அந்த தொகை உடனடியாக வாடிக்கையாளரின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக குறுஞ்செய்தி வரும். ஆனால் ஏ.டி.எம்-ல் இருந்து அந்த தொகை வராது.

மேலும் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் வாரத்தில் பாதி நாட்கள் பணம் இல்லை என்ற அறிவிப்பு கொண்ட அட்டை தொங்க விடப்படுகிறது. மேலும் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக பணம் எடுக்க செல்லும் போது ஏ.டி.எம். எந்திரங்களில் அவுட் ஆப் ஆர்டர், அவுட் ஆப் சர்வீஸ் என்ற வாசகம் மட்டுமே காணப்படுகிறதே தவிர அவசரத்திற்கு பணம் எடுக்க முடியவில்லை. அது போல் பணம் செலுத்தும் எந்திரங்களும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பல நாட்கள் இயங்காமலேயே உள்ளன. எனவே வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு வங்கிகள் ஏ.டி.எம்.களில் உள்ள எந்திரங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News