செய்திகள்
உடுமலையில் அமைச்சரின் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்

உடுமலையில் அமைச்சரின் உதவியாளரை கடத்திய 7 பேர் கைது

Published On 2020-09-27 18:05 GMT   |   Update On 2020-09-27 18:05 GMT
உடுமலையில் அமைச்சரின் உதவியாளரை காரில் கடத்திய வழக்கில் 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத்தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் உடுமலை அன்சாரி வீதியில் உள்ளது. கால்நடை பராமரிப்பு த்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகிறார். அமைச்சரின் நேர்முக உதவியாளராக உடுமலை அருகே உள்ள தாந்தோணி கிராமத்தைச்சேர்ந்த கர்ணன் (வயது 33) என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் பெதப்பம்பட்டி அருகே உள்ள வடுகபாளையத்தைச்சேர்ந்த கற்பகம் என்ற பெண் டைப்பிஸ்ட்டாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி கற்பகம் வழக்கம்போல் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். சிறிது நேரத்தில் அமைச்சரின் உதவியாளர் கர்ணன் காரில் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் காரை அலுவலகம் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அவர் உள்ளே சென்றதும் அந்த பகுதியில் காரில் காத்திருந்த 4 பேர் திடீரென்று அலுவலகத்திற்குள் புகுந்து அமைச்சரின் உதவியாளரை காரில் கடத்தி சென்றனர். அந்த காரில் ஏற்கனவே காரை ஓட்டி வந்தவர் இருந்தார். அமைச்சரின் உதவியாளரை கடத்தி சென்ற கும்பல் தளி போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மொடக்கப்பட்டி பகுதியிலுள்ள ஒரு குடோனுக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் அங்கிருந்து வாளவாடி பிரிவுக்கு வந்த அந்த கும்பல் கர்ணனை இறக்கி விட்டு சென்றது.

இந்த சம்பவம் குறித்து கற்பகம் கொடுத்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக 5 தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தல் ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் விவரம் வருமாறு:-

உடுமலை ராமசாமி நகரை சேர்ந்த பிரதீப் (வயது 39), உடுமலை காந்தி சதுக்கம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (23), உடுமலை பழனிசாலையை சேர்ந்த சுரேந்திரன் (27), பட்டுக்கோட்டையை சேர்ந்த வினோத் (20), செல்வகணபதி (23), தாகா (21) பட்டுக்கோட்டை, போடிப்பட்டியை சேர்ந்த தேவராஜு (55).

இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தது. இதில் பிரதீப், சுரேந்திரன் மற்றும் ரகு ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். அமைச்சரின் உதவியாளர் கர்ணன், ஏற்கனவே நிலத்தை விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்திருப்பதாக அறிந்துள்ளனர். எனவே அவரிடம் இருக்கும் பணத்தை அந்த கும்பல் பறிக்க திட்டமிட்டது. இதற்காக சம்பவத்தன்று அருண்குமார் என்பவர் மூலம் பட்டுக்கோட்டையை சேர்ந்த வினோத், செல்வகணபதி, தாகா ஆகியோரை ஏற்பாடு செய்து திட்டமிட்டு இந்த கடத்தலை நடத்தியுள்ளனர். கடத்தி செல்லப்பட்ட கர்ணனை பிரதீப்பின் மாமாவான தேவராஜுவின் குடோனுக்கு கடத்தி சென்று ரூ.10 லட்சம் கேட்டுள்ளனர்.

பின்னர் கர்ணனின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி இந்த கும்பல் ரூ.50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டனர். மேலும் ஒரு வாரத்தில் மேற்கொண்டு பணம் தருவதாக கூறியதால் கர்ணனை அந்த கும்பல் வாளவாடி பிரிவில் இறக்கி விட்டு சென்றனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரகு என்பவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News