செய்திகள்
ராமேசுவரம் கோவில் மேற்குவாசலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் முற்றுகையிட்ட காட்சி.

ராமேசுவரம் கோவில் வாசலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் முற்றுகை

Published On 2020-09-27 09:38 GMT   |   Update On 2020-09-27 09:38 GMT
22 தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் நீராட அனுமதிக்கக்கோரி ராமேசுவரம் கோவில் வாசலில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் முற்றுகையிட்டனர்.
ராமேசுவரம்:

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடவும், அக்னி தீர்த்த கடற்கரையில் அமர்ந்து தர்ப்பண பூஜை செய்யவும் தொடர்ந்து தடை அமலில் இருந்து வருகிறது. இதனால் 400-க்கும் மேற்பட்ட யாத்திரை பணியாளர்களும், 100-க்கும் மேற்பட்ட புரோகிதர்களும் கடந்த 6 மாதத்திற்கு மேல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலின் மேற்கு வாசல் முன்பு தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இணைந்து ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளை திறந்து பக்தர்கள் நீராட வழக்கம்போல் அனுமதி வழங்கவேண்டும், கோவிலில் உள்ள மேற்கு வாசல் வழியாக சாமி தரிசனம் செய்வதற்கு வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும், அக்னி தீர்த்த கடற்கரையில் அமர்ந்து புரோகிதர்கள் திதி தர்ப்பண பூஜை செய்ய அனுமதி வழங்க வேண்டும், தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை வரை அனைத்து சுற்றுலா வாகனங்களையும் வழக்கம்போல் அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவிலின் மேற்குவாசல் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

முற்றுகை போராட்டத்திற்கு தி.மு.க. கட்சியின் நகர செயலாளர் நாசர்கான், விவசாய அணி செயலாளர் சுந்தர்ராஜன், மாணவரணி துணை அமைப்பாளர் ராஜபாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் பாரி ராஜன், நகர் தலைவர் ராஜாமணி, களஞ்சியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் சிவா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் செந்தில் வேல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால் வருகிற 28-ந் தேதி சர்வ கட்சி ஆலோசனைக்கூட்டம் நடத்தி அதன் பின்னர் ராமேசுவரத்தில் ஆட்டோ, கார் உள்ளிட்ட எந்த வாகனங்களும் ஓடாமல் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News