செய்திகள்
சி.பா.ஆதித்தனார் உருவப்படத்திற்கு வைகோ மரியாதை செலுத்திய காட்சி.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா: உருவப்படத்திற்கு அரசியல் தலைவர்கள் மரியாதை

Published On 2020-09-27 07:10 GMT   |   Update On 2020-09-27 07:10 GMT
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 116-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னை:

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 116-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து இன்று பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சென்னை எழும்பூரில் சி.பா.ஆதித்தனார் சிலை அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன், பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மாலை முரசு நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டியில் சி.பா.ஆதித்தனாரின் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “உன்னதமான உழைப்பின் அடையாளமாக, எளிய நடையால் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர் மேம்ப்பாட்டிற்கும் பாடுபட்டவர் சி.பா.ஆதித்தனார்” என்று புகழாரம் சூட்டியுள்ளார். 

பெரம்பலூர் எம்.பி.பாரிவேந்தர், “தமிழ் செய்தித்தாள் சேவையின் முன்னோடி சி.பா.ஆதித்தனார்” என்று கூறியுள்ளார். மேலும் பல்வேறு தலைவர்கள் சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News