செய்திகள்
கோப்புப்படம்

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல ரூ.4 கோடியில் சொகுசு படகு

Published On 2020-09-26 23:08 GMT   |   Update On 2020-09-26 23:08 GMT
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல ரூ.4 கோடியில் சொகுசு படகுகள் தயார் செய்யும் பணி தொடங்கியது.
கன்னியாகுமரி:

புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். 3 படகுகள் மட்டுமே இயக்கப்படுவதால் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் 2 அதிநவீன சொகுசு படகுகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவாவில் ரூ.8 கோடி செலவில் 2 ‘குளு... குளு...’ வசதியுடன் கூடிய அதிநவீன சொகுசு படகுகள் தயார் செய்யும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக ரூ.4 கோடி செலவில் தயாரான “தாமிரபரணி“ என்ற சொகுசு படகு கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் இருந்து கடல் வழியாக கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த படகு 150 இருக்கை வசதியுடன் முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட வசதி கொண்டதாகும். ஆனால், கொரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் இந்த படகு போக்குவரத்து இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மேலும் ஒரு அதிநவீன சொகுசு படகு கோவாவில் தயாரானது. இந்த படகு கோவாவில் இருந்து கடந்த 23-ந் தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு கேரளா வழியாக 520 கடல் நாட்டிக்கல் மைல் தூரம் பயணம் செய்து நேற்று காலை கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுதுறைக்கு வந்து சேர்ந்தது. இதில் 9 என்ஜினீயர்கள் வந்தனர். இந்த புதிய படகு 27 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இதன் கீழ் தளத்தில் 131 சாதாரண இருக்கைகளும், மேல்தளத்தில் 19 குளிரூட்டப்பட்ட இருக்கைகளும் உள்ளன. மேல்தளத்தில் உள்ள இருக்கைகள் வி.ஐ.பி.க்கள் பயணிக்க ஒதுக்கப்பட்டு உள்ளது. புதிய படகில் சுற்றுலா பயணிகள் செல்ல கட்டணம் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. கொரோனா ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட பிறகு தான் கட்டணம் நிர்ணயித்து 2 புதிய சொகுசு படகுகளும் இயக்கப்படும், அதுவரை படகுதுறையில் அவை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய சொகுசு படகு சோதனை ஓட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
Tags:    

Similar News