செய்திகள்
கோப்புப்படம்

ஊரடங்கு காலத்தில் கிராமங்களில் 68 சதவீதம் இறப்பு குறைவு - கணக்கெடுப்பில் தகவல்

Published On 2020-09-26 19:13 GMT   |   Update On 2020-09-26 19:13 GMT
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கிராமங்களில் 68 சதவீதம் இறப்பு குறைந்திருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது.
சென்னை:

தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு, தமிழகத்தில் 18 மாவட்டங்களில் உள்ள 66 கிராமங்களில் 660 பெண்களிடையே கொரோனா நோய் குறித்து கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கணக்கெடுப்பு நடத்தியது. இதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்து உள்ளது. குறிப்பாக 51.5 சதவீத கிராமங்களில் தொற்று இருப்பதுடன், 5 சதவீத பெண்கள் கொரோனா பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. 60 சதவீத கிராமங்களில் நூறு நாள் வேலை தரப்படுகிறது. கடந்த 6 மாதத்தில் குறைந்தபட்சம் தென்காசி, மதுரை மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 6 நாட்களும், திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 80 நாட்களும் வேலை கிடைத்திருக்கிறது. 22 சதவீத பகுதிகளில் கள்ளசாராயம் விற்பனை செய்யப்படுகிறது.

டாஸ்மாக் கடைகளில் 34 சதவீத ஆண்கள் வேலைக்கு போய் சம்பாதித்த பணத்தில் மதுபாட்டில் வாங்குகின்றனர். 65 சதவீதம் பேர் அரசு கட்டுபாட்டை பின்பற்றுகிறார்கள். 58 சதவீதம் குடும்பங்களில் ஆண்கள் வீட்டு வேலைகளில் பங்கெடுக்கிறார்கள். 32 சதவீத பெண்கள் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாகவும், 59 சதவீத மக்கள் பசியில்லாமலும், 68 சதவீதம் இறப்பு குறைந்துள்ளதும், 36 சதவீதம் நகை அடமானம் மூலமாகவும், 41 சதவீதம் கந்து வட்டிக்கு கடன் வாங்குதல் மூலமாகவும், 14 சதவீதம் அறிமுகமான நபர்களிடம் கைமாற்று வாங்குதல் மூலமாகவும், 9 சதவீதம் வீட்டிலுள்ள பொருட்களை விற்பதின் மூலமாகவும் கடந்த 6 மாத பொருளாதார தேவையை சமாளித்துள்ளார்கள். 36 சதவீத காவல் நிலைய புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களில் 53 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 6 மாதமும் 78 சதவீத மக்களுக்கு ரேஷன் கடைகளில் பொருள்கள் கிடைத்தது.

அரசுக்கு பொதுமக்கள் பல்வேறு பரிந்துரைகளையும் அளித்து உள்ளனர். குறிப்பாக வருகிற டிசம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் இலவசமாக தரமான உணவு பொருட்கள் வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுப்படுத்தபட வேண்டும். பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்.

நூறு நாள் வேலை 200 நாட்களாக அதிகப்படுத்தி சம்பளத்தை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும். பால் உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்களின் அடிப்படை ஆதார விலையை நிர்ணயம் செய்து, அனைத்தையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கள்ள சாராயத்தை ஒழிக்க வேண்டும் கல்விக் கடன் ரத்து செய்யப்பட வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் முறைப்படுத்தப்பட வேண்டும்.

இதுபோன்ற பல தகவல்கள் தெரியவந்து உள்ளது.
Tags:    

Similar News