செய்திகள்
கர்ப்பிணி

கடந்த 6 மாதங்களில் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் 4,431 பிரசவம்- சென்னை மாநகராட்சி

Published On 2020-09-26 02:11 GMT   |   Update On 2020-09-26 02:11 GMT
கடந்த 6 மாதங்களில் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் 4,431 பிரசவம் நடந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 15 மண்டலங்களில் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15-க்கும் மேற்பட்ட நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் 3 அவசரகால மகப்பேறு மையங்கள் இயங்கி வருகின்றன. இதில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தவிர்த்து, நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் அவசரகால மகப்பேறு மையங்களில் பிரசவம் பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பது தவிர்க்கப்பட்டதை அடுத்து, சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சமுதாய நல மையங்கள் மற்றும் அவசரகால மகப்பேறு மையங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் 13 நகர்ப்புற சமுதாய நல மையங்கள், 3 அவசரகால மகப்பேறு மையங்களில் கடந்த மார்ச் மாதம் 550 பிரசவங்களும், ஏப்ரலில் 649 பிரசவங்களும், மே மாதத்தில் 846 பிரசவங்களும், ஜூன் மாதத்தில் 765 பிரசவங்களும், ஜூலையில் 760 பிரசவங்களும் பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 861 பிரசவங்களும் நடைபெற்றுள்ளன. இதில், புளியந்தோப்பு நகர்ப்புற சமுதாய நல மையத்தில் மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் 122 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. அந்தவகையில் மொத்தமாக நகர்ப்புற சமுதாய நல மையங்களில் 4,431 பிரசவம் நடந்துள்ளது.

மேற்கண்ட தகவலை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News