செய்திகள்
மாநகர பஸ் மீது கிரானைட் கற்கள் ஏற்றி வந்த டிரைலர் லாரி மோதி நிற்கும் காட்சி

கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி மாநகர பஸ் மீது மோதியது- 3 பேர் படுகாயம்

Published On 2020-09-26 01:50 GMT   |   Update On 2020-09-26 01:50 GMT
100 டன் எடை உள்ள கிரானைட் கல் ஏற்றி வந்த டிரைலர் லாரி, மாநகர பஸ் மீது மோதியது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அங்கிருந்த சிக்னல் கம்பமும் சேதம் அடைந்தது.
செங்குன்றம்:

கர்நாடக மாநிலம் கனகாபுராவில் இருந்து 100 டன் எடையுள்ள கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு டிரைலர் லாரி ஒன்று நேற்று காலை மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு சென்றுகொண்டிருந்தது.

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சிக்னல் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிரைலர் லாரி, பாடியநல்லூர் பணிமனையில் இருந்து ஜி.என்.டி.சாலை நோக்கி வந்த மாநகர பஸ்சின் பக்கவாட்டில் மோதியது.

இதில் மாநகர பஸ் சேதமடைந்தது. பஸ் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரி மோதிய வேகத்தில் மாநகர பஸ் அருகில் சிக்னலுக்காக நின்றிருந்த 3 மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளியது. இதில் 3 மோட்டார் சைக்கிள்களும் நொறுங்கின.

மேலும் மோட்டார்சைக்கிளில் வந்த சரவணன் (வயது 45), அவருடைய மகன் ஸ்ரீராம் (16), பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த குப்புசாமி(51) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் பாடியநல்லூர் பகுதியில் உள்ள சிக்னல் கம்பமும் சேதமடைந்தது. மேலும் டிரைலர் லாரியில் இருந்த தலா 50 டன் எடையுள்ள 2 கிரானைட் கற்களும் சாலையில் விழுந்துவிட்டது.

லாரி மோதிய போது மாநகர பஸ்சில் பயணிகள் யாரும் இல்லாததாலும், கிரானைட் கற்கள் விழுந்தபோது லாரியின் அருகில் பொதுமக்கள் யாரும் இல்லாததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்துவந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அலமேலு ரமணபாபு மற்றும் போலீசார், விபத்தில் சிக்கிய மாநகர பஸ், டிரைலர் லாரியை அப்புறப்படுத்தினர். கீழே விழுந்த கிரானைட் கற்களையும் அகற்றினர்.

மேலும் இது தொடர்பாக டிரைலர் லாரி டிரைவரான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விரேஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் நேற்று காலை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News