செய்திகள்
சேலம் செவ்வாய்பேட்டை தாண்டவன் தெரு பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.

கொரோனாவுக்கு 2 மகன்கள் பலி: மனவேதனையில் தாயும் மரணம்

Published On 2020-09-25 12:19 GMT   |   Update On 2020-09-25 12:19 GMT
சேலம் செவ்வாய்பேட்டையில் கொரோனாவுக்கு 2 மகன்கள் பலியான நிலையில் மனவேதனை அடைந்த தாயும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி செவ்வாய்பேட்டையில் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் மட்டும் தினமும் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. அதேநேரத்தில் கொரோனா பலி எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. குகை, செவ்வாய்பேட்டை, அம்மாபேட்டை பகுதிகளில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில், சேலம் செவ்வாய்பேட்டை தாண்டவன் தெருவில் வசித்து வந்த அண்ணன், தம்பி இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனா பாதிப்பால் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மகன்கள் இருவரும் இறந்த சோகத்தில் அவரது தாயாரான 70 வயது மூதாட்டியும் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த மூதாட்டி சரியாக சாப்பிடாமல் இருந்து வந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று காலை அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் அவரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக அப்பகுதியில் தகவல் பரவியது.

இதனால் அப்பகுதியில் வசிக்கக்கூடிய வியாபாரிகளும், பொதுமக்களும் அச்சமடைந்தனர். இதையடுத்து தாண்டவன் தெருவில் உள்ள தங்கம், வெள்ளி கடைகள் மற்றும் பட்டறைகளை அதன் உரிமையாளர்கள் நேற்று அடைத்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாகவே செவ்வாய்பேட்டை தாண்டவன் தெரு பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டதாக அதன் வியாபாரிகள் தெரிவித்தனர். அதேநேரத்தில் அந்த பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் குடியிருப்பு பகுதியில் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் பிளீச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அங்குள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News