செய்திகள்
குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்த காட்சியை படத்தில் காணலாம்.

கள்ளக்குறிச்சி அருகே தீ விபத்தில் 5 குடிசைகள் எரிந்து சேதம்

Published On 2020-09-24 12:13 GMT   |   Update On 2020-09-24 12:13 GMT
கள்ளக்குறிச்சி அருகே தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. தாமதமாக வந்ததாக கூறி தீயணைப்பு வீரர்களிடம் கிராம மக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரி கிராமத்தை சேர்ந்தவர் மணி(வயது 60). இவரது மனைவி தேவகி. தொழிலாளியான இவர்கள் இருவரும் நேற்று காலை குடிசை வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு வேலைக்கு சென்றனர். மதியம் 1 மணியளவில் இவர்களின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்புவீரர்கள் வருவதற்கு காலதாமதம் ஆனதால் தீ மளமளவென எரிந்து அருகில் உள்ள குடிசைகளுக்கும் பரவியது. இதையடுத்து குடிசை வீடுகளின் மீது தண்ணீரை ஊற்றியும், மேற்கூரையை பிரித்து எறிந்தும் கிராம மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் குடிசைக்குள் இருந்த கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட சில பொருட்களை வெளியே எடுத்து வந்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்து வந்த சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குடிசைகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் மணி, சின்னதுரை, இளவரசு மற்றும் லட்சுமி, கோவிந்தராசு ஆகியோரின் 5 குடிசைகள் எரிந்து சாம்பல் ஆனது. மேலும் 10 பவுன் நகை, நிலத்தின் பத்திரங்கள், குடும்ப அட்டை, பணம் மற்றும் பீரோ, கட்டில், டிவி, நெல் மூட்டைகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை? இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்னதாக தீ விபத்து நிகழ்ந்து தாமதமாக வந்த தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் வீரர்களிடம் கிராமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, தீ விபத்து நிகழ்ந்த உடன் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தோம். ஆனால் அவர்கள் ஒரு மணி நேரத்துக்கு பிறகு தாமதமாக வந்ததால் 5 குடிசைகள் எரிந்து சேதம் அடைந்துவிட்டன. குறித்த நேரத்தில் வந்து இருந்தால் சேதத்தை தவிர்த்து இருக்கலாம் என புகார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News