செய்திகள்
அனுப்பன்குளத்தில் உள்ள பழமையான தெப்பத்தை படத்தில் காணலாம்.

500 ஆண்டு பழமையான அனுப்பன்குளம் தெப்பத்தை பராமரிக்க முடிவு

Published On 2020-09-24 02:43 GMT   |   Update On 2020-09-24 02:43 GMT
சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தெப்பம் பயன்பாடு இல்லாத நிலையில் இருந்தது. இதை சீரமைக்க முடிவு செய்து பணிகளை தொடங்கி உள்ளனர்.
சிவகாசி:

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது அனுப்பன்குளம் கிராமம். இந்த பகுதியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னரே பெரியகுளம் கண்மாய் அருகில் தெப்பம் உருவாக்கப்பட்டு அதை பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

அனுப்பன்குளம் கண்மாய் நிரம்பும் போது அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் இந்த தெப்பத்துக்கு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு அக்கால மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். பின்னர் நாளடைவில் கண்மாயில் இருந்து தண்ணீர் வரும் பாதையில் அடைப்பு ஏற்பட்ட பின்னர் தெப்பத்தின் அருகில் இருந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து தெப்பத்தில் விட்டு பயன்படுத்தினர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்த தெப்பம் பயன்பாட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு பழமையான இந்த தெப்பத்தை கடந்த சில வருடங்களாக போதிய பராமரிப்பு இல்லாமல் சுற்றுச்சுவர்கள் சேதம் அடைந்து பின்னர் பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருந்துள்ளனர்.

பின்னர் நாளடைவில் அந்த பகுதியில் கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்தன.

இந்தநிலையில் அனுப்பன்குளத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜன் தற்போது இந்த பழமைவாய்ந்த தெப்பத்தை சீரமைக்க முடிவு செய்து பணிகளை தொடங்கி உள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொழிலதிபர்களின் பங்களிப்போடு இந்த தெப்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

அனுப்பன்குளம் தெப்பம் சுண்ணாம்பு மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்டது. தெப்பத்துக்கு இறங்கும் வகையில் 4 இடங்களில் கற்படிக்கட்டுகள் உள்ளது. பயன்பாட்டில் இருந்த தெப்பம் தற்போது மைதானம் போல் மண்மேவி கிடந்தது. 32 அடி ஆழம் கொண்ட இந்த தெப்பத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இந்த தெப்பத்தை சுத்தம் செய்து பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடைபயிற்சி மேற்கொள்ளவும் இதற்கான தனிப்பாதை அமைக்கப்படும்.

இதற்கான செலவு தொகையை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்திடமும் நிதிஉதவி பெற உள்ளோம். இந்த தெப்பத்தை சீரமைக்க தேவையான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் தெப்பம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News