செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் பறிமுதலான தங்கம், டிரோன் கேமராக்கள், செல்போன்களை படத்தில் காணலாம்.

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வந்த 1 கிலோ தங்கம் பறிமுதல் - 6 பேர் கைது

Published On 2020-09-23 19:24 GMT   |   Update On 2020-09-23 19:24 GMT
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானங்களில் கடத்தி வந்த ரூ.57 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 98 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.
சென்னை:

கொரோனா வைரஸ் ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிப்பவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது.

அதில் வந்த சென்னையை சேர்ந்த 35 வயது வாலிபரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரது உடைமையில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 5 டிரோன் கேமராக்கள், விலை உயர்ந்த 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.26 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 510 கிராம் தங்கத்தையும் கைப்பற்றினார்கள்.

அதேபோல் தோகா மற்றும் குவைத்தில் இருந்து வந்த 2 சிறப்பு விமானங்களில் வந்த விருதுநகரை சேர்ந்த 3 பேர், ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த 2 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தபோது அவர்களது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.30 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 586 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மொத்தம் 6 பேரிடம் இருந்து ரூ.57 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 96 கிராம் தங்கத்தையும், ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள டிரோன் கேமராக்கள், செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பிடிபட்ட 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News