செய்திகள்
கொலை செய்யப்பட்ட மீனா - கைதான சண்முகம்

பூந்தமல்லியில் கல்லூரி மாணவி கொலை- கைதான கொத்தனார் வாக்குமூலம்

Published On 2020-09-23 02:28 GMT   |   Update On 2020-09-23 02:28 GMT
பூந்தமல்லியில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவர் வீட்டில் வேலை செய்த கொத்தனார் கைது செய்யப்பட்ட நிலையில், நகைக்காக கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பூந்தமல்லி:

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், பி.ஜி.அவென்யூ, 4-வது தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகள் மீனா (வயது 20). தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் அவரது வீட்டில் கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், மீனா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகை, செல்போன் கொள்ளை போயிருந்தது.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தேடி வந்த நிலையில், விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சண்முகம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மாணவி மீனாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

போரூரில் தங்கியிருந்த தான் கடந்த சில வாரங்களாக மாணவி மீனாவின் வீட்டில் நடைபெறும் கட்டுமான பணியில் கொத்தனார் வேலை செய்து வந்தேன். இந்த நிலையில் தனக்கு கடன் பிரச்சினை காரணமாக பணத்தேவை இருந்ததால் பெரும் மனக்குழப்பத்தில் இருந்து வந்தேன்.

இதனால் வீட்டில் இருந்த மீனாவின் கழுத்தில் உள்ள நகையை பறிக்க திட்டம் தீட்டினேன். அதன்படி நேற்று முன்தினம் வழக்கம் போல் அவர்களது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, மீனாவின் தாய் தனலட்சுமி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் வெளியே சென்ற நேரம் பார்த்து மீனாவை மிரட்டி கழுத்தில் உள்ள நகையை கழற்றி தருமாறு கேட்டேன்.

அதற்கு மீனா நகையை தர மறுத்து கூச்சலிட்டார். இதையடுத்து நான் அவரின் மீனாவின் வாயை மூட முயன்ற நிலையில், அவர் தொடர்ந்து கூச்சலிட்டதால் தான் சிக்கிவிடுவோமா என்ற பயத்தில் அருகிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து மீனாவின் தொண்டையில் குத்தினேன். இதில் மீனா ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்து துடி, துடித்து இறந்து போனார்.

உடனே இதனால் பதறிப்போன நான் என்ன செய்வதென்று தெரியாமல் மீனா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி மற்றும் செல்போனை பறித்து அங்கிருந்து தப்பி ஓடினேன். அதன்பின்னர், போரூரில் நான் தங்கியுள்ள அறைக்கு சென்று அங்கிருந்த எனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் அய்யப்பந்தாங்கலில் உள்ள நகைக்கடைக்கு சென்று நகையை அடகு வைத்து பணம் வாங்கினேன். இதையடுத்து, மோட்டார் சைக்கிளிலேயே திருவண்ணாமலையில் உள்ள எனது வீட்டிற்கு தப்பி சென்று விடலாம் என்ற நினைத்த நிலையில், போலீசார் என்னை விழுப்புரத்தில் மடக்கி பிடித்து விட்டனர் என்று கூறினார். இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து நகை, செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News